வெள்ளி, பிப்ரவரி 21, 2014

நானொரு பைத்தியம்.....தேவை வைத்தியம்


ஒருமுறை ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினேன். எல்லாவரும் என்னை பரிகாசம் செய்தனர்."இவனுக்கென்ன கிறுக்கா ?...வேலியில  போற ஓணான எடுத்து வேட்டியில விட்டுக்கிறானே......"என்றனர். 
.
பின்னொரு முறை நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யுங்கள் என சொன்ன போது எல்லோரும், "இவன் பெரிய கிறுக்கனா இருப்பானோ? தேவை இல்லாத உபதேசமெல்லாம் கொடுக்கறானே" என்றனர். 

பின்னொரு முறை பசியோடு அலைந்து கொண்டிருந்த ஒரு பிச்சைகாரனுக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுத்தேன். எல்லோரும், "இவனுக்கு என்ன மறை கழன்று விட்டதோ? கண்ட கண்ட பொறுக்கி பயலுகளுகெல்லாம் அன்னதானம் பண்ணுரானே" என்றனர்.

பின்னொரு முறை ஒரு அனாதை  ஆசிரமத்திற்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்தேன். எல்லோரும் "நிச்சயமா இவனுக்கு பைத்தியம்தான். கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராச்சும் இப்படி வீணாகக்குவங்களா? என்றனர்.

பின்னொரு முறை நான் செய்யும் சேவைகளை பிடிக்காத ஒருவன் என்னை தாக்க வந்தபோது நான் அவனை எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்தேன். அவன் மீண்டும் வீண் வம்பு வளர்த்து என்னை அடித்து நொறுக்கினான்.ஆனால் நான் அவனை திருப்பி அடிக்கவில்லை. எல்லோரும் "இவன் சரியான பொட்டப்பயலா இருக்கானே. அடிக்கிறவன திருப்பி அடிக்க வேண்டியதுதானே" என்றனர்.

எனக்குள்ளே பழிவாங்கும் எண்ணம் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியதொடங்கியது. கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்து என்னை அடித்தவன் கதையை முடித்தேன். இல்லை இல்லை. முடிக்க வைத்தேன். எல்லோரும் "அவன் சிங்கம்டா....கில்லாடிடா..." என்றனர்.

இந்தமுறை எனக்கே தோன்றியது, எனக்கு பைத்தியம் என்று. "ஆமாம் ஆமாம் நான் பைத்தியக்காரன்தான்“  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது