வெள்ளி, பிப்ரவரி 21, 2014

வெற்றிப்படிகட்டு




நிறமற்ற ஓர்  இரகசிய உலகிற்கு போக 
வழி சொல்கிறேன் கவனமா கேட்டுக்கொள்.
இந்த மாடிப்படியில் வழியாக ஏறிச்செல் 
இதன் சூனியங்களில் உன் கால்தடங்கள் பதிவதில்லை 
ஓசைகளும் இரைச்சலும் கேட்பதில்லை.
அங்கு தொண்டையை  அடைக்கும் சோகங்களில்லை. 
எப்போதும் சந்தோஷமும் சிரிப்பும் மட்டுமே.
கூடவே நீ ஆசைப்பட்ட அமைதியும் நிம்மதியும் 
இதுநாள் வரை உன்னை ஏமாற்றிக்  கொண்டிருந்த 
அர்த்தமில்லாத வார்த்தைகளும்  
வாக்குறுதிகளும் இங்கு இல்லை
இந்த மாடிப்படிகளுக்குக் இருட்டின் நிறம் 
பட்டப்பகலில் வெளிச்சம் அள்ளி வீசும் கதிரவனோ 
நட்டநடு இரவில் பாலொளி வீசும் சந்திரனோ 
இந்த மாடிப்படியில் கால் வைத்ததில்லை.
தன்னிலேயே துவங்கி தன்னிலேயே முடிந்திடும்
ஒரு கோளமாக உன்னை மாற்றிக் கொண்டு  
இந்த மாடிப்படிகளில் உருண்டு செல் - அல்லது  .
அதிலிருந்தே பறந்து அதிலேயே கலந்துவிடும் 
புகையாய் உன்னை மாற்றிக் கொண்டு 
இந்த மாடிப்படிகளில் தவழ்ந்து செல்.
ஆனால் படி ஏறிச்செல்லும் களைப்பில் 
ஓய்வெடுக்க அதிக நேரம் அமர்ந்து விடாதே.
அதன் இருட்டு உன் கண்களின் வழியே ஊடுருவி 
உன் இருதயத்தில் நுழைந்து 
உன் இரத்த நாளங்களில் கலந்துவிடும்.
இந்த மாடிப்படி ஒரு  கருவி மட்டுமே.
அதைக் கடந்ததும் காண்பாய் நிறமற்ற மணமற்ற ஒரு உலகம் 
உனக்கு மட்டும் சொந்தமான ஒரு உலகம் - அங்கு 
உன் கால்களை பூட்டிய முயலாமை விலங்கு அறுந்துவிழும்
உன் கைகளை கட்டியிருந்த இயலாமை கயிறுகள் விலகும்
உன்  கண்ணை மூடியிருந்த அறியாமை கருந்துணி அவிழும்  
கண்ணீரையும், ஏளன சிரிப்பையும், வஞ்சனைகளையும்,
இரத்த காயங்களையும், வலிகளையும் படிகளாய் கொண்ட   
இந்த மாடிப்படிகளில் மூச்சைப்பிடித்து ஏறிச்செல்.
சோர்ந்துபோகாமல் நீள உயரங்கள் பாராமல் 
இன்றே நீ நம்பிக்கையோடு முயற்சி செய்தால்
நாளைக்கு நீ சுதந்திர மனிதன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது