என் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் செய்யும்போது நான் ரொம்ப உஷாரா இருப்பேன். (பயம் இல்லைங்க, ஹீ..ஹீ..மரியாதை... மரியாதை..) சரக்கடிப்பது அவளுக்குப் பிடிக்காது. அதனால் மனைவியின் மீது மரியாதை தோன்றும் சமயங்களில் கொஞ்சம் சரக்கு அடிப்பதுண்டு. அப்போது நான் ரொம்ப உஷாரா இருப்பேன்.
வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய நேரம். வீட்டில் பிள்ளைகள் அவர்களுடைய அறையில் படித்துக்கொண்டிருந்தனர்.
மனைவி சமையல் செய்து கொண்டிருந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் கடமுடாவென ஓசையுடன் மோதி விளையாடிக் கொண்டிருந்தன. வாசலைத் தாண்டி உள்ளே சென்ற நான் மெதுவாக ஹாலில் அலமாரியில் மறைத்து வைத்திருந்த ஸ்காட்ச் பாட்டிலை எடுத்தேன். சுவரில் மாட்டியிருந்த போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னை உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. வேறு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டேன். ஏன்னா நான் எப்பவும் ரொம்ப உஷார். வாஷ் பேசின் மேலே உள்ள பிளாஸ்டிக் ரேக்கிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்து மடமடவென ஒரு கட்டிங் ஊற்றிக் குடித்தேன். கிளாஸை வாஷ்பேசினில் கழுவி மீண்டும் பிளாஸ்டிக் ரேக்கில் பத்திரமா வைத்தேன். ஆங்..ஆங்.. வச்சாச்சு.... ஸ்காட்ச் பாட்டிலையும் பத்திரமா அலமாரியில் ஒளிச்சு வச்சாச்சு. போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னைப் பார்த்து சிரித்தது.
மெதுவா சமையலறைக்குள் நுழைந்தேன். மனைவி சமையலுக்கு உருளைக்கிழங்கு நறுக்கிக் கொண்டிருந்தாள். யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஏன்னா நான் ரொம்ப உஷார்.
நான்: "என்னம்மா இன்னிக்கு ராத்திரிக்கு சமையல்?'
மனைவி: "சப்பாத்தியும்,உருளைக்கிழங்கு குருமாவும்?"
நான்: "சித்தப்பா போன் பண்ணினாங்களா?. அவுங்க பையனுக்கு வேலை கெடச்சுதா?"
மனைவி: "எங்க கெடச்சுது. அவன் சும்மா ஊரை சுத்திக்கிட்டு இருக்கான்".
நான் சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் ஹாலில் அலமாரிக்கு அருகே சின்ன சப்தங்கள். ஆனா அது நான் அலமாரியில் இருந்து ஸ்காட்ச் பாட்டில் எடுக்கும் சவுண்டு இல்ல. வாஷ் பேசின் மேல உள்ள பிளாஸ்டிக் ரேக்கில் இருந்து கிளாஸ மெதுவா எடுத்து கடகடவென இன்னொரு கட்டிங் அடிச்சு முடிச்சேன். பாட்டிலை கழுவி வாஷ் பேசின்ல வச்சிட்டேன். பிளாஸ்டிக் கிலாஸ பத்திரமா அலமாரிக்குள்ள வச்சிட்டேன். இப்பவும் யாரும் பார்க்கல. ஏன்னா நான் ரொம்ப உஷார்.
மீண்டும் மனைவியிடம் சென்று, "அவன் சின்னப் பையன் தானே, அப்படித்தான் இருப்பான்".
மனைவி: "ம்.... சின்னப் பையனா..? மூணு கழுதை வயசாச்சு.காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப்போகுது".
நான்: "ஆமா. நான் மறந்தே போயிட்டேன். இப்பத்தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு".
நான் மீண்டும் திரும்பி வந்து உருளைக்கிழங்கை அலமாரியில் இருந்து வெளியே எடுத்தேன். ("ச்சே அலமாரியை யாரோ இடம் மாத்தி வச்சிருக்காங்க"). ரேக்கிலிருந்து ஸ்காட்ச் பாட்டில எடுத்து ஒரு கட்டிங் வாஷ் பேசினில் ஊற்றி மடமடவென குடித்து முடித்தேன். போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னைப் பார்த்து சத்தமாக சிரித்தது. நான் ரேக்க எடுத்து சமையலறைக்குள் வைத்துவிட்டு சப்பாத்தியை கழுவி பிளாஸ்டிக் அலமாரில பத்திரமா வைத்தேன். மனைவி இன்னும் வாஷ் பேசினில சமையல் பண்ணிக் கொண்டு இருந்தாள். இப்பவும் யாரும் பார்க்கல. ஏன்னா நான் ரொம்ப உஷார்.
நான்: (சற்று கோபத்துடன்), "எங்க சித்த்தப்பா பையனை நீ கழுதைன்னா சொல்லுறே, பிச்சிடுவேன் பிச்சி"
மனைவி: "சும்மா வளவளன்னு பேசாம போய் உக்காருங்க".
நான் மீண்டும் அலமாரிக்குள் சென்று ஸ்காட்ச் பாட்டிலுக்குள் இருந்த சப்பாத்தியை எடுத்து இன்னொரு கட்டிங் குடித்தேன். வாஷ் பேசின நல்லா கழுவி பிளாஸ்டிக் ரேக்கில வச்சிட்டேன். போட்டோவில் இருந்து மனைவி என்னைப் பார்த்து இன்னும் சத்தமா சிரிச்சது. கழுதை பொம்மை இன்னும் சமையல் செய்து கொண்டிருந்தாள். ஆனா யாரும் என்னை பார்க்கவில்லை. ஏன்னா நான் ரொம்ப உஷார்.
நான்: "அப்படீன்னா கரடிக்கு இன்னும் வேலை கிடைக்கலையா...?"
மனைவி: "ஏங்க போயி நல்லா தண்ணி ஊத்தி முகம் கழுவுங்க".
நான் மீண்டும் சமையறைக்குள் சென்று ரேக்கின் மீது அமைதியாக உட்கார்ந்தேன். இந்த ஸ்டவ்வ ஏன் ரேக் மேல வச்சிருக்கான்னு தெரியலை. வெளியே பாட்டில்கள் மோதி உருளும் ஓசை கேட்டது. மெதுவா எட்டிப்பார்த்தேன். மனைவி ஒரு கட்டிங் மடமடவென குடித்து முடித்ததை பார்த்தேன். நல்லவேளை எந்த கழுதையும் இதைப் பார்க்கவில்லை. ஏன்னா கரடி பொம்மை ரொம்ப உஷார். சித்தப்பா இன்னமும் சமையல் செய்து கொண்டிருந்தாள். போட்டோவில் இருந்த நான் மனைவியை பார்த்து பலமாக சிரித்தேன்.
"ஏன்னா நான் ரொம்ப உஷார்".
சரிதான்.
பதிலளிநீக்கு"Sotally Tober"
பதிலளிநீக்குஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே.... மீள் பதிவா?
பதிலளிநீக்குஹா ஹா ஹா.. நீங்க ரொம்ப உசார் தான்
பதிலளிநீக்கு