செவ்வாய், ஜூலை 12, 2016

நான் கவிஞனுமில்லை

விவரமில்லாதவனின்
எழுத்துக்களில் விஷயம்
எதுவும் இருக்காது.
அது கலங்கிய
குட்டையைப் போல 
அப்படியும் இப்படியும்
அலைபாய்ந்தபடி இருக்கும்.
சலனம் நின்றபோதுகண்ட
வடிவத்தைக் ஒரு
ஆர்வக் கோளாறில்
கவி(தை)தா…..ன்னு  
கூப்பிட்டு பார்த்தேன்.
போடா “……….”ன்னு
”பீப்” வார்த்தைல
திட்டிடுச்சு

ஞாயிறு, ஜூன் 26, 2016

பேனா முனை

கண்முன்னே ஒரு கொடுமை
நடக்கையில் அவன்
தீவிரவாதியாய் மாறிடுவான்.
வெடிகுண்டுகள் வீசி பலரை
பலிவாங்கி இருக்கிறான்.
கைது செய்து நீதிமன்றத்தால்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
இப்போது சிறையில் இருக்கிறான்.
தாய்மொழியில் பேச மனுகொடுத்தது
பரிசீலனையில் உள்ளது.
கருணை இருந்தால் சிலசமயம்
அந்த உரிமை கிடைக்கலாம்.
இருந்தாலும் அவன் பேசுவதற்கு
தாய்மொழியில் இப்போது
வார்த்தைகள் ரொம்பவும் குறைவு.
அதிலும் பாக்கியிருப்பதில் அதிகமுள்ளது
நிமிர்ந்து உட்காரச் சொன்னால்
துவண்டு படுத்துவிடும் வார்த்தைகளே
பேசுவதை கேட்கின்றவன்
உணர்ச்சியடைந்தாலும்
கண்ணை உருட்டி
மிரட்டல் பார்வை பார்த்தாலே
பயத்தில் உச்சா போயிடுறான். 

இரவு

இரவுகளின் பக்கங்கள்
மிகவும் கூர்மையானவை.
பகல் பொழுதுகளையெல்லாம்
அது பல துண்டுகளாக
வெட்டித் தள்ளுகின்றது

பல்வேறு வடிவங்களில்
பல்வேறு அளவுகளில்
பல்வேறு கோணங்களில்

அர்த்தமுள்ள துண்டுகளாக
அர்த்தமில்லா துண்டுகளாக
அர்த்தங்களே வேண்டாத துண்டுகளாக

வெட்டி முறித்து வீசுகின்றது   


வெள்ளி, ஜூன் 03, 2016

முகமது அ(ஞ்ச)லி




பட்டாம்பூச்சியின் சிறகுகள் போல சப்தமின்றி துள்ளிக் குதிக்கும் கால்கள்
தேனீ கொட்டுகின்ற வேகத்தில் மின்னலென குத்துக்கள் பொழியும் கைகள் 
கொண்ட மாவீரன் கடைசியில் தன் கல்லறையில் எழுதச் சொன்ன 
வாசகம் என்ன தெரியுமா...?




"ஒன்று, இரண்டு, மூன்று,…… பத்து…. என இப்போது எண்ணிக் கொள்ளுங்கள்...
நான் எழுந்திருக்க போவதில்லை".








படங்கள் உதவி : கூகுள் 

திங்கள், மே 30, 2016

விளம்பரம்

நிறைக்குடம் தளும்பாது..!!!  

(கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

1. குடத்தை யாரும் தொடக்கூடாது.
2. குடத்தை சமதளமுள்ள தரையில் அசையாமல் வைக்க வேண்டும்.
3. குடத்தில் மேற்கொண்டு நீர் ஏதும் ஊற்றக்கூடாது.
4. குடத்திலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது.
5. குடத்தை வைத்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்படக்கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்த நிலையிலும், வேறு ஏதாவது காரணத்தினால் எதிர்பாராத விதமாக குடம் தளும்பினால் அதற்கு இந்த பழமொழியை உருவாக்கியவர் எந்த வகையிலும் பொறுப்பில்லை
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...!!! 

சனி, மே 28, 2016

பெரிய மனசு

உயிர்போகும் நிலையில்
உள்ளே ஒருவர் 
படுத்திருக்கிறார்.
இல்லைன்னா 
கையோ காலோ
முறிந்து, தேய்ந்து
இரத்தம் வழிந்துகொண்டு 
இதயத்துடிப்பு மெல்ல 
அடங்கியபடி இருக்கலாம்.

ஒருவேளை சுவாசம் 
இழந்து மூச்சு நின்றுபோகும்
நிலையில் இருக்கலாம்.

யாராய் இருந்தாலும் 
எங்கிருந்து வருபவராய் 
இருந்தாலும் சுமந்து 
கொண்டு கிடைத்த 
இடைவெளிகளில்
புகுந்து செல்லும்போது
அலறியபடி கதறியபடி 
ஓடுகின்ற பெரிய மனம் 
கொண்ட அந்த ஊர்திக்கு  

உள்ளே உயிருக்கு 
போராடிக்கொண்டு இருப்பவன் 
சொந்தமா...பந்தமா..?

திங்கள், மே 23, 2016

செருப்பு

"ஒரு நல்ல செருப்பு குடுங்க சார்" என்று கேட்டபடியே முகத்தில் கவலை கொப்பளிக்க கடைக்குள் வந்த அவன் கால் பாதத்தை பார்வையால்
ஒருமுறை ஸ்கானிங் செய்து, கால் அளவை தோரயமாக கணித்து
கொண்டு ஏழாம் நம்பர் செருப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து
கொடுத்தேன். அவன் செருப்பை பார்த்துவிட்டு கையில் வாங்கி
போட்டுப் பார்க்காமலேயே "இல்லை சார்..இது பெரிசு. இதை விட 
சின்ன சைஸு குடுங்க" என்றான்.

கடுப்புடன் மீண்டும் உள்ளே சென்று ஆறாம் நம்பர் செருப்பை கொண்டு
வந்து கொடுத்தேன். வாங்க வந்தவன் அதையும் போட்டுப் பார்க்காமல்,
"ம்ஹும்..இதுவும் பெரிசு சார். இன்னும் கொஞ்சம் சின்னது வேணும்".

திரும்பவும் உள்ளே சென்று ஐந்தாம் நம்பர் செருப்பை எடுத்து வந்தேன்.
கையில் வாங்கி அதை அப்படியும் இப்படியும் திருப்பி திருப்பி
பார்த்து விட்டு "இதவிட ஒரு நம்பர் சின்னது குடுங்க சார்" என்றான்

இன்னாடா இது...இப்படி கலாயிக்றானே..? செருப்பு இவனுக்கா..இல்ல
இவனோட மகனுக்கா..? என்று யோசித்தபடியே மீண்டும் உள்ளே சென்று
நாலாம் நம்பர் செருப்பை கொண்டுவந்து கொடுத்தேன்.

சந்தோஷமாக செருப்பை கையில் வாங்கியவன் விலையை கேட்டு 
காசைக் கொடுத்து விட்டு செருப்பை தன காலில் மாட்டத் தொடங்கினான்.
நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தனது ஏழுஅங்குல அளவு பாதத்தை
அந்த நான்கு அங்குல அளவு செருப்பினுள் எப்படியோ கஷ்டப்பட்டு
நுழைத்துவிட்டான். கால் பாதங்கள் பிதுங்க தோல் பிய்ந்து ரணமாகிவிட
தயார் நிலையில் இருந்ததை கண்டநான் அவனிடம் கேட்டேன்.
"இவ்வளவு சின்ன சைஸு செருப்ப ஏன் இப்படி கஷ்டப்பட்டு போடுறீங்க.?
நான் வேற யாருக்கோ வாங்கறீங்கன்னு நெனச்சேன்

இவ்ளோ சின்ன சைஸு  செருப்ப ஏன்  போடுறீங்கன்னா கேட்டீங்க..
அது வந்து சார், வீட்டுல அப்பாவுக்கு பைத்தியம். அம்மா பக்கவாதம் வந்து 
கால் கை விளங்காம படுத்திருக்காங்க. தம்பி ஒரு அடிதடி கேஸில 
மாட்டிகிட்டு இப்ப ஜெயில்ல இருக்கான்.கட்டிகுடுத்த தங்கச்சி வாழா 
வெட்டியா வீட்டுக்கு திரும்பி வந்துட்டா..செஞ்சினிருந்த வேலை போயி 
இப்ப ஆறுமாசமா வேற வேலை எதுவும் கெடைக்கல. பசங்களுக்கு பீஸ் 
கட்டமுடியாம ஸ்கூல்ல TC குடுத்து அனுப்பிட்டாங்க. அவுங்களுக்கு 
சரியா சாப்பாடு போடக்கூட முடியல. இதுக்கு நடுவில என் பொண்டாட்டி 
வேற ஒருத்தன லைன் விட்டுனு இருக்கா..இந்த நிலைமையில இப்படி 
வலிக்கற மாதிரி ஒரு செருப்ப போட்டுக்கினு வீட்டுக்கு போகணும் சார்.

வீட்டு வாசல்ல இந்த செருப்ப கழட்டி வைக்கும் போது வர்ற
ஒரு சுகம் இருக்கே...அது அனுபவிச்சாதான் தெரியும் சார்...!!!