கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 16, 2016

என்னை அறிந்தால்.....

நிறுத்தத்தில் நிற்காமல்
சென்ற பேருந்தில்
ஏறுவதற்கு சிறிது தூரம்
ஓடவேண்டியதாயிற்று.
படியில் ஒரு கால் வைப்பதற்கு
மட்டுமே இடம் இருந்தது.

தொங்கியபடியே கொஞ்ச நேர பயணம்.
நிறுத்தங்களில் ஆட்கள் இறங்க
பேருந்தின் உள்ளேறினேன்  
முன்பின் அறிந்திராத
ஒரு நல்லவன் அவன்
இறங்கவேண்டிய இடம் வந்ததும்
இருக்கையை விட்டு எழுந்தான்.

அதுவரை அவனுக்கு
சொந்தமாயிருந்த இருக்கை
இப்போது எனக்கு சொந்தம்.
இடம் கிடைத்ததில் வந்த
ஆணவம் உடனே
உறக்கமாக உருமாறியது.

ஓட்டுநர்  திடீர் பிரேக்
அடிக்க  முன்பக்க இருக்கையில்
தலைமுட்டி தூக்கம் கலைந்த
போது பயணிகள் எல்லாரும்
இறங்கி விட்டிருந்தனர்.

பேருந்தில் இப்போது
நானும் நடத்துனரும்
ஓட்டுனரும் மட்டும்.
இடையில் எங்கோ 
நடத்துனரும் இறங்கிட 
அடுத்த நிறுத்தத்தில்
ஓட்டுனரும் இறங்கினார்.

இப்போது பேருந்தில் 
நான் மட்டும்.
ஆளரவமில்லாத இடத்தில்
ஒரு பேருந்தும் அதில்
கூட்டமாக நான் ஒருவனும்.
எங்கே சென்றுகொண்டு
இருந்தோம் என்று
யோசிக்கும் போது 
பேருந்தும் தெரியவில்லை
நான் மட்டுமே தெரிந்தேன்.

என்னை நானே அறிவதின்
ரகசியம் எவ்வளவு
சிந்தித்தும் பிடிபடாமல் போக
பேருந்தை விட்டு இறங்கி
நானும் வெளியேறினேன்.

செவ்வாய், ஜூலை 12, 2016

நான் கவிஞனுமில்லை

விவரமில்லாதவனின்
எழுத்துக்களில் விஷயம்
எதுவும் இருக்காது.
அது கலங்கிய
குட்டையைப் போல 
அப்படியும் இப்படியும்
அலைபாய்ந்தபடி இருக்கும்.
சலனம் நின்றபோதுகண்ட
வடிவத்தைக் ஒரு
ஆர்வக் கோளாறில்
கவி(தை)தா…..ன்னு  
கூப்பிட்டு பார்த்தேன்.
போடா “……….”ன்னு
”பீப்” வார்த்தைல
திட்டிடுச்சு

ஞாயிறு, ஜூன் 26, 2016

பேனா முனை

கண்முன்னே ஒரு கொடுமை
நடக்கையில் அவன்
தீவிரவாதியாய் மாறிடுவான்.
வெடிகுண்டுகள் வீசி பலரை
பலிவாங்கி இருக்கிறான்.
கைது செய்து நீதிமன்றத்தால்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
இப்போது சிறையில் இருக்கிறான்.
தாய்மொழியில் பேச மனுகொடுத்தது
பரிசீலனையில் உள்ளது.
கருணை இருந்தால் சிலசமயம்
அந்த உரிமை கிடைக்கலாம்.
இருந்தாலும் அவன் பேசுவதற்கு
தாய்மொழியில் இப்போது
வார்த்தைகள் ரொம்பவும் குறைவு.
அதிலும் பாக்கியிருப்பதில் அதிகமுள்ளது
நிமிர்ந்து உட்காரச் சொன்னால்
துவண்டு படுத்துவிடும் வார்த்தைகளே
பேசுவதை கேட்கின்றவன்
உணர்ச்சியடைந்தாலும்
கண்ணை உருட்டி
மிரட்டல் பார்வை பார்த்தாலே
பயத்தில் உச்சா போயிடுறான். 

இரவு

இரவுகளின் பக்கங்கள்
மிகவும் கூர்மையானவை.
பகல் பொழுதுகளையெல்லாம்
அது பல துண்டுகளாக
வெட்டித் தள்ளுகின்றது

பல்வேறு வடிவங்களில்
பல்வேறு அளவுகளில்
பல்வேறு கோணங்களில்

அர்த்தமுள்ள துண்டுகளாக
அர்த்தமில்லா துண்டுகளாக
அர்த்தங்களே வேண்டாத துண்டுகளாக

வெட்டி முறித்து வீசுகின்றது   


சனி, மே 28, 2016

பெரிய மனசு

உயிர்போகும் நிலையில்
உள்ளே ஒருவர் 
படுத்திருக்கிறார்.
இல்லைன்னா 
கையோ காலோ
முறிந்து, தேய்ந்து
இரத்தம் வழிந்துகொண்டு 
இதயத்துடிப்பு மெல்ல 
அடங்கியபடி இருக்கலாம்.

ஒருவேளை சுவாசம் 
இழந்து மூச்சு நின்றுபோகும்
நிலையில் இருக்கலாம்.

யாராய் இருந்தாலும் 
எங்கிருந்து வருபவராய் 
இருந்தாலும் சுமந்து 
கொண்டு கிடைத்த 
இடைவெளிகளில்
புகுந்து செல்லும்போது
அலறியபடி கதறியபடி 
ஓடுகின்ற பெரிய மனம் 
கொண்ட அந்த ஊர்திக்கு  

உள்ளே உயிருக்கு 
போராடிக்கொண்டு இருப்பவன் 
சொந்தமா...பந்தமா..?

சனி, ஆகஸ்ட் 30, 2014

ஓவியமா அல்லது ஓவியனா....?












 




தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014



ஓவியமா அல்லது ஓவியனா....?

வண்ணமயமான, வல்லமையான
சாந்தமான, சாமர்த்தியமான 
பவித்ரமான, பண்பட்ட
தெய்வீகமான, திறமையான 
அமைதியான, அர்பணிப்பான 
கண்ணைக்கவரும், கைவண்ணமிகுந்த
ரசிக்கும்படியான, ரசனைமிகுந்த 
ஐஸ்வர்யமான, ஆச்சரியமான
சீர்மிகுந்த, மிகச்சிறந்த
அம்சமான, தனித்துவமான
மதிமயக்கும், ஒழுக்கமான
சுண்டியிழுக்கும், சொக்கவைக்கும்
வசீகரமான,  கட்டுகோப்பான
சௌந்தர்யமான, நுணுக்கமான 
சொக்கவைக்கும், வியக்கவைக்கும்
பேரழகான, பேரறிவான 
அச்சினில்வார்த்த, ஆத்மார்த்தமான
நேர்த்தியான ஓவியம், கீர்த்திமிகுந்த ஓவியன்

வெற்றிபெறப் போவது யார்..?

ஓவியமா அல்லது ஓவியனா....?


ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

நால்வகை அறிவு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014





நால்வகை அறிவு



அறிவார் அறிவாரென அறிவார்அவ்
வறிஞரை குருவெனப் பெறுவாய் 

அறிவார் அறிவாரென அறியார் – அவ்
வசடன்கண் திறந்திட துணைவாய்

அறியார் அறியாதென அறிவார் – அப்
பாமரன் அறிந்திட பயிற்றுவாய்

அறியார் அறியவும் விரும்பார் – அம்
மடையனை நெருங்கா தகல்வாய்

புதன், மார்ச் 19, 2014

நினைவிருக்கட்டும்...

 



நீதிமான்களும் குற்றவாளிகளும் 
இடம் மாறி நிற்கும் 
வித்யாசமான நீதிமன்றம் இது  
பதில்தர முடியாத 
கேள்விக்கணைகள் தொடுத்து 
இரண்டுபக்கம் கூரான வாளினால்
உங்கள் முகவரியின் தலையறுக்க
ஆனந்தத்தின் அகலப்பாதையில்
ஏமாற்றங்களின் படிகள் ஏறிக்கடந்து
நம்பிக்கையின் விடியலை நோக்கி

நான் வருவேன்.......
 

புதன், மார்ச் 12, 2014

பாசவலை

ஆதரவின்மை என்ற துன்பச் சிறையுண்டு
அதனைக்கண்டு கலங்கும் மனமுண்டு 
கண்ணீர் விட்டு கதறி அழுவதை பார்க்கும்போது
கொஞ்சமாவது கண்கலங்க தோன்றுகின்றது 
துக்கம் புயலென தாக்கும்போது 
நெஞ்சு விம்மி வலிக்கின்றது.
நினைவுகளில் மட்டுமே இனி என்பதை மறந்து 
திரும்பிவர எத்தனிக்கையில் 
கொழுந்துவிட்டு எரியும் தீ தடுக்கின்றது 
மறந்திடுவாயோ என்றெண்ணும்போது 
உடலைவிட அதிகமாய் உள்ளம் தகிக்கின்றது
விட்டுச்செல்லும் உறவுகள்
தீர்ந்து போன சோகங்கள்
அடுத்த ஜென்மத்திலாவது 
எதுவும் அறியாமல் எதற்கும் ஆசைபடாமல்
சொந்தங்களின் பந்தச்சிறையில்
அகபட்டுக்கொள்ளாமல் இருக்க 
எதையும் தாங்கும் இதயமொன்று கொடுத்தருள் இறைவா
என்பதே சாம்பலாய் மாறும்வரை 
இருக்கும் மிச்சநேர பிரார்த்தனை
என்னதான் இருக்கட்டுமே
மண்குடத்திலிருந்து நீரில் விழுந்து 
கலந்து சங்கமிக்கும் போதுதான் அமைதி 
இல்லையென்றால் அடங்காத அந்த பாசம் 
இந்த சாம்பலை உயிர்த்தெழ செய்தாலும் செய்திடும்  

 

வியாழன், ஜனவரி 23, 2014

அழுகுணி விளையாட்டு




 
மலர்கள் மீதும்
புற்களின் மீதும்
படிந்திருந்த
சின்னஞ்சிறு 
பனித்துளிகளுடன்
பிரம்மாண்ட 
சூரியக்கதிர்களின்
அழுகுணி ஆட்டம்.
விடியல். 

திங்கள், ஜனவரி 06, 2014

ஒருதலைக் காதல்

பல சமயங்களில் 
நீயென் 
வேருக்கு 
நீராய் 
பொழிந்தாலும் 
சில சமயங்களில் 
துளிர்க்கும் 
இலைகளை 
கிள்ளி எறிகிறாய்!....