மாடிப்படிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாடிப்படிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 12, 2016

நான் கவிஞனுமில்லை

விவரமில்லாதவனின்
எழுத்துக்களில் விஷயம்
எதுவும் இருக்காது.
அது கலங்கிய
குட்டையைப் போல 
அப்படியும் இப்படியும்
அலைபாய்ந்தபடி இருக்கும்.
சலனம் நின்றபோதுகண்ட
வடிவத்தைக் ஒரு
ஆர்வக் கோளாறில்
கவி(தை)தா…..ன்னு  
கூப்பிட்டு பார்த்தேன்.
போடா “……….”ன்னு
”பீப்” வார்த்தைல
திட்டிடுச்சு

ஞாயிறு, ஜூன் 26, 2016

பேனா முனை

கண்முன்னே ஒரு கொடுமை
நடக்கையில் அவன்
தீவிரவாதியாய் மாறிடுவான்.
வெடிகுண்டுகள் வீசி பலரை
பலிவாங்கி இருக்கிறான்.
கைது செய்து நீதிமன்றத்தால்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
இப்போது சிறையில் இருக்கிறான்.
தாய்மொழியில் பேச மனுகொடுத்தது
பரிசீலனையில் உள்ளது.
கருணை இருந்தால் சிலசமயம்
அந்த உரிமை கிடைக்கலாம்.
இருந்தாலும் அவன் பேசுவதற்கு
தாய்மொழியில் இப்போது
வார்த்தைகள் ரொம்பவும் குறைவு.
அதிலும் பாக்கியிருப்பதில் அதிகமுள்ளது
நிமிர்ந்து உட்காரச் சொன்னால்
துவண்டு படுத்துவிடும் வார்த்தைகளே
பேசுவதை கேட்கின்றவன்
உணர்ச்சியடைந்தாலும்
கண்ணை உருட்டி
மிரட்டல் பார்வை பார்த்தாலே
பயத்தில் உச்சா போயிடுறான். 

இரவு

இரவுகளின் பக்கங்கள்
மிகவும் கூர்மையானவை.
பகல் பொழுதுகளையெல்லாம்
அது பல துண்டுகளாக
வெட்டித் தள்ளுகின்றது

பல்வேறு வடிவங்களில்
பல்வேறு அளவுகளில்
பல்வேறு கோணங்களில்

அர்த்தமுள்ள துண்டுகளாக
அர்த்தமில்லா துண்டுகளாக
அர்த்தங்களே வேண்டாத துண்டுகளாக

வெட்டி முறித்து வீசுகின்றது   


திங்கள், ஜூலை 21, 2014

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 2

என்னைப் போலவே இந்த படத்தோட இயக்குனருக்கும் மாடிப்படின்னா ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். பாருங்களேன், பாட்டு தொடங்கி முடியும்வரை அந்த அழகான மாடிப்படியிலேயே படம் பிடித்திருக்காங்க. கதாநாயகி மாடிப்படியிலேயே ஆடவும் செய்றாங்க.




 

செவ்வாய், மே 20, 2014

கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலைகள் இல்லை.

நிக்கோலஸ் ஜேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமா நிக் வோய்ச்சிச். ஒரு உணர்ச்சிகரமான பேச்சாளர். 
பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.

இவர் தன்னுடைய எட்டாவது வயதில் மனஉளைச்சல் காரணமாக அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார். அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி சுட்டிக்காட்டியது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. அதன்பின் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, நீச்சல் அடிக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.

தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது வயதில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. 2012-ம் ஆண்டு, கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய 21-ம் அகவையில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தபின் மிகப்பிரபலமான பேச்சாளராக உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிமான பள்ளிக் கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயர்ச்சியின் முக்கியத்துவம் பற்றிய உரையாற்றியுள்ளார். இவர் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிட்ஸ் (Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life) 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் தான் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார். 

கீழே நான் இணைத்துள்ள வீடியோவில் கை கால்கள் இல்லாமலே இவர் செய்யம் ஆச்சரியமூட்டும் சாகசங்களை பாருங்கள். இணைய வேகம் கருதி இந்த சிறிய அளவிலான வீடியோவினை இணைத்தேன். youtube ல் இன்னும் நிறைய வீடியோக்கள் உள்ளன. எல்லாம் மிகவும் அருமை.   





செவ்வாய், மார்ச் 18, 2014

மாடிப்படி வாஸ்து

எனக்கு வாஸ்து சாஸ்திரம் என்ற வஸ்துவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஆனால் இது மாடிப்படி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் என்பதாலும் இந்த பதிவு.
 
 
 
இப்போது கட்டும் வீடுகள் பெரும்பாலும் அடுக்குமாடிகள் என்பதால் மாடிப்படிகள் முக்கியத்துவம் பெறுகிறது. மாடிப்படிகள் பல்வேறு வடிவங்களிலும், சிமெண்ட், இரும்பு அல்லது மரத்திலான படிகளாகவும் கட்டப்படுகிறது. இருந்தபோதிலும் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மாடிப்படியின் அமைப்பு வாஸ்து சாஸ்திர அமைப்புடன் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.  
 
 
மாடிப்படிகள் ஒரு வீட்டின் வாஸ்து தோஷத்தை நிர்ணயம் செய்கின்றது என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா..?
 
 
சீன வாஸ்து சாஸ்திரம் பெங் சுயி நிபுணர்களின் கருத்துப்படி மாடிப்படிகள் வீட்டின் வாஸ்து தோஷத்தை கொடுப்பதில் / நீக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
  

மாடிப்படிகள் எப்போதும் வீட்டின் மேற்கு திசையிலும் தெற்கு திசையிலும் மட்டுமே அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மாடிப்படிகள் அமைப்பது தோஷமாக மாறி உங்களுக்கு பண நஷ்டங்கள் ஏற்படுத்தி விடலாம்.

மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணாக இருப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் "0" என முடியும் எண்ணிக்கையில் அதாவது10, 20, 30 என இருக்கக்கூடாது  

சுழல் மாடிப்படிகள் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கலாம் என்பதால் தவிர்க்கவும் 

உடைந்த படிக்கட்டுகளை உடனடியாக செப்பனிட்டு சரி செய்ய வேண்டும்.


மாடிபடிக்கு கீழே குளியலறையோ, சமையலறையோ அல்லது பூஜை அறையோ அமைக்க கூடாது.



வீட்டின் நடுவே மாடிப்படி வைப்பது சரியானதல்ல என்றாலும் அதனால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவ்வாறு வைக்கும் மாடிப்படியில் சரியான வளைவுகள் இல்லையென்றால் விபரீதமான பலன்களை கொடுக்கும். மாடிபடிகளுக்கு மேற்புறம் மின்விளக்கு அமைப்பதும் கூடாது.

 



 

சனி, டிசம்பர் 28, 2013

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 1


காதல் அரும்பிய(மாடிப்)படி 


டைடானிக் படத்தில் ரோஸ் & ஜேக் காதல் அரும்பியபடி

====================================================

புரட்சி தலைவர் ஆணையிட்ட(மாடிப்)படி 



எங்க வீடு பிள்ளை படத்தின் இறுதிக்காட்சியில் இதே மாடிப்படியில் இரண்டு வேடங்களில் புரட்சி தலைவர் இறங்கி வருவது செம ஸ்டையிலாக இருக்கும்.

 

வெள்ளி, நவம்பர் 29, 2013

சமத்துவ மாடிப்படி

நம்மளோட சின்ன  வயசுல நடந்தத எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க முடியாது என்றாலும் சில விஷயங்கள்  அதுவும் கொஞ்ச காலத்துக்கு பழக்கமாக மாறி பின் மறந்துபோனவை கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கும் இல்லையா.......?

"இப்ப என்னதாண்டா  சொல்ல வர்ற? ஞாபகம் வச்சுக்க முடியாதுன்னும் சொல்லுற. அப்புறம் உடனே ஞாபகம்  இருக்கும்னும் சொல்லுற", அப்பிடின்னு ஒரு சவுண்டு கேக்குது .

சாரி பாஸ், மேட்ருக்கு வர்றேன்.





எனக்கு மாடிப்படிகள்  என்றால் ரொம்ப பிடிக்கும். என்ன காரணம்னு தெரியாது. அனால் எனக்கு பிடித்த சில விஷயங்களில் முக்கியமான ஒன்று மாடிப்படிகள். நம் வாழ்கையின் ஒவ்வொரு சாதகமான  நிகழ்வுகளும் நம்மை  நல்ல நிலைக்கு உயர்த்தும் ஒவ்வொரு படிகட்டுகள் தான். நம்மை  நிலை உயர்த்திக்கொள்ள நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் ஒவ்வொரு படிகட்டுகள், அப்படீன்னா லிப்ட்ல மேல போறவன என்ன சொல்ரேன்னு  கேக்கறீங்களா?  அவுங்கள விடுங்க நாம மெதுவா மாடிப்படி ஏறியே போவோம்.




எனக்கு சொந்த ஊரு கேரளாவில் உள்ள ஒரு சின்ன கிராமம். அப்பா சென்னைக்கு வேலை தேடி வந்து செட்டிலாகி   இப்போ சென்னை சொந்த ஊராகி அந்த கிராமம்  தூரத்து சொந்த ஊராகி விட்டது, சரி விஷயத்துக்கு வருகிறேன். பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான்.அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். சென்னையில் வந்து நான் கண்ட முதல் அதிசயம் ஒரு மாடிப்படி. ஊரில் மாடிப்படி உள்ள வீடுகள் மிகவும் குறைவு என்பதாலோ நான் பார்க்காமல் விட்டதாலோ என்னவோ வந்த இடத்தில 5 வயது சிறுவனான எனக்கு  முதன் முதலாக பார்த்த மாடிப்படி அதிசயமாக தோன்றியது.





அப்பா வேலை செய்து கொண்டிருந்த கடை ஓனரின் வீட்டில்தான் நாங்கள் வாடகைக்கு தங்கியிருந்தோம்.முன்புறம் வீட்டு ஓனரின் வீடும் மாடியில் ஒரு வீடும். பின்புறம் ஒரு ஓலைவேய்ந்த வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். பின்புறம் உள்ள எங்கள் வீட்டுக்கு செல்லும் வராண்டாவில்தான் மாடிக்கு செல்லும் வழி. மாடிப்படியின் முடிவில் ஒரு கதவும் அதை தாண்டி ஒரு சிறிய வரண்டாவும் பிறகு  அந்த வீடும். ஆனால் மாடியில் குடியிருந்தவர்கள் பாதுகாப்புகாக மாடி ஏறியதும் உள்ள கதவை சாத்தியே வைத்து இருப்பார்கள். அதனால் அந்த மாடிப்படி ஏறக்குறைய ஒரு சின்ன குகை மாதிரியாக இருக்கும்,  அதன் பிறகு வந்த  நாட்களில் அந்த மாடிப்படியில் தனியாக அமர்ந்து இருப்பதும் படிகளை எண்ணிக்கொண்டே மேலும் கீழுமாய் ஏறி இறங்கி விளையாடுவதும் எனக்கு பிடித்த பொழுதுபோக்காக ஆகிப்போனது.





பக்கத்திலேயே இருந்த மாநகராட்சி பள்ளிகூடத்தில் என்னை சேர்த்து விட்டார்கள், அந்த பள்ளியிலும் மாடிப்படிகள் இருந்தது. ஒன்றல்ல இரண்டு மாடிப்படிகள். ஆனால் ஒன்றாம் வகுப்பு கீழ் தளத்தில் இருந்ததனால் அந்த மாடிப்படிகள் இருந்த விஷயம் எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அதாவது நான் இரண்டாவதோ அல்லது  மூன்றாவதோ படிக்கும்போதோதான் தெரியவந்தது, அடா....டா....டா....டா....டா. இது மொதல்லையே தெரியாம போச்சேன்னு வருத்தப்பட்டு அதுக்கப்புறம் அங்கேயும் மாடிப்படிதான் என்னோட தினசரி விளையாட்டு தளமா ஆகி போச்சு.

அந்த சமயங்களில் எனக்கு விளையாட்டு தோழர்கள் யாரும் கிடையாது;பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி  நான் தனியாகத்தான் விளையாடி கொண்டிருப்பேன். ஏன்னா மாடிவீட்டுகாரங்களும் வீட்டு ஓனர் வீட்டுக்காரங்களும்  ரொம்ப வசதியானவங்க. கொஞ்சம் தள்ளியே நிக்கணும்.

சென்னைக்கு நான் வந்து செட்டிலான அந்த வருடம் "மழை வருடம்" போல . சரியாய் சொல்வதென்றால் 1976 நவம்பர் மாதம் சரியான மழை. எங்கள் வீட்டுக்குள்ளும், எங்க வீட்டு ஓனர் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தங்குவதற்கு இடமில்லாமல் எல்லாவரும் நாலைந்து  நாட்கள் மாடி வீட்டில் தஞ்சமடைந்தோம். நான் விளையாடும் அந்த மாடிப்படிதான் எல்லாவருக்கும் சமையல் செய்யும் சமத்துவபுரமாக  மாறியிருந்தது. நான் மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்கும் நாட்கள் அவை. ஒருவேளை இயற்கை எங்கள்  எல்லோரையும் சரிசமானமாக மாற்றிய  அந்த சின்ன வயது சம்பவம்தான் நான்  மாடிப்படிகளை விரும்புவதர்க்கு காரணமோ என்னவோ.................. ?