புதன், பிப்ரவரி 12, 2014

கொயந்த அயுவுது

சுருக்குகயிற்றின் முடி இறுகியது.அந்த வயோதிகனுக்கு எதிர்த்து நிற்க முடியவில்லை. இழுத்த இழுப்புக்கு நடக்க தொடங்கினார். உடலின் எடை குறைந்து கொண்டே வருவது போல் தோன்றியது. நெடுநாட்களாக தொல்லைகொடுத்துக்  கொண்டிருந்த எல்லா நோய்களும் தீர்ந்து சட்டென்று சுகமானது போல தோன்றியது. கழுத்தில இருந்த கயிறும் அதை இழுத்துகொண்டிருந்த ஆளையும் திடீரென காணவில்லை. 

சிந்தனை செய்தபடி இருக்கும்போதே அவரது உரோமங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து காற்றில் பறக்க  தொடங்கியது  அவர் உடல் சிறியதாகிக்கொண்டே சென்றது.உருவம் சுருங்கி சுருங்கி ஒரு அணுவின் அளவினை அடைந்தது. சுருண்டு நெளிந்த அவரை யாரோ போர்த்தி மூடினர். சறுக்கு மரத்தில் வழுக்கி வீழ்வதுபோல் ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்தார். எவ்வளவு நேரம் தூங்கினார் என்றே அவருக்கு தெரியவில்லை.எங்கும் ஒரே இருட்டு. இருட்டு மட்டும்.

கண்விழித்தபோது தூரத்தில் ஒரு பிரகாசமான வெளிச்சம். அந்த வெளிச்சத்தை நோக்கி யாரோ வேகமாக தள்ளி விட்டது போல் தோன்றியது.வேகமாக முன்னேறி சென்றபடியே இருந்தார். 

அவரது எடை சிறிது கூடியிருந்தது. எங்கிருந்தோ யாரோ அழும் குரல் கேட்டது. தூரம் குறைய குறைய வெளிச்சத்தின் பிரகாசம் அதிகரித்தது. கூடவே அழுகையின் குரலும். அவர் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டார். 

அவரது நினைவுகள் மறைந்து மனது சூன்யமாகியது.  ஒன்றும் அறியாத அவஸ்தை, ஒன்றும் நினைவுக்கு வராத அவஸ்தை.  சட்டென யாரோ அவரை பிடித்து.இழுக்க இருட்டு எனும் போர்வைக்குள் இருந்து வெளிச்சத்திற்கு வந்து முடி நரைத்த ஒரு முதிய பெண்மணியின் கையில் வீழ்ந்த அவர் மீண்டும் ஒரு சிறிய  குழந்தையாய் மாறியிருந்தார். 

அற்புதமான  இந்த பூமியில் இன்னொரு பிறவியினை தந்த கடவுளுக்கு அவர் உரக்க உரக்கக்  கூவியபடி நன்றி கூறினார். ஆனால் கூடியிருந்தவர்கள் குழந்தை பாலுக்கு அழுவதாக நினைத்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது