திங்கள், ஜூலை 21, 2014

திரையில் ரசித்த மாடிப்படிகள் - 2

என்னைப் போலவே இந்த படத்தோட இயக்குனருக்கும் மாடிப்படின்னா ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். பாருங்களேன், பாட்டு தொடங்கி முடியும்வரை அந்த அழகான மாடிப்படியிலேயே படம் பிடித்திருக்காங்க. கதாநாயகி மாடிப்படியிலேயே ஆடவும் செய்றாங்க.




 

ஞாயிறு, ஜூலை 20, 2014

உறைந்த உறக்கம்

இணையத்தில் படித்த ஒரு நகைச்சுவை.ஒரு பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர், பழுதுபார்க்க கொடுத்திருந்த தனது வாகனத்தை திருப்பி எடுப்பதற்காக மெக்கானிக் ஷெட்டுக்கு வந்திருந்தார்.அவரை அடையாளம்கண்டவுடன்  அங்கிருந்த ஒரு  மெக்கானிக் அவரிடம்  சென்று "டாக்டர் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்றான். சற்றே ஆச்சரியத்துடன் டாக்டர் சம்மதித்தார். அவன் உடனே "இங்க இருக்கும் வண்டிகளில் உள்ள எஞ்சினும் மனிதனின் இதயம் போன்றதுதான்.இதயத்தை கிழித்து ரத்தக்குழாய்களின் அடைப்பை  நீக்கி,தேவைப்பட்டால் வெட்டி நீக்கி தையலிட்டு இணைத்து அதை மீண்டும் ஒரு  புதிய இதயம் போல்  நீங்கள் இயங்க செய்கிறீகள்.நானும் அதேபோல் என்ஜினில் பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றி  பொருத்தி  புதிய  எஞ்சின் போல மாற்றுகிறேன். நீங்களும் நானும் ஏறக்குறைய ஒரே வேலையை  செய்தாலும் நீங்கள் என்னைவிட அதிகம் பணம் வாங்குகிறீர்களே இது நியாயமா..?" என்று கேட்டான். டாக்டர் பொறுமையாக அவன் அருகில் வந்து, நீ சொல்வதெல்லாம் சரி தம்பி, ஆனால் எஞ்சின் இயங்கிக்கொண்டிருக்கும் போதே உன்னால் இந்த வேலைகளை செய்யமுடியுமா?" என்று கேட்டார்டாக்டரின் பதிலில் பொதிந்திருந்த உண்மையை  உணர்ந்த  மெக்கானிக்   தலையை குனிந்தான். 

இனி விஷயத்துக்கு வருவோம். இருதயம் துடிப்பை நிறுத்துகிறது. மூளை வேலையை நிறுத்துகிறது. உடம்பில் ஒரு சொட்டு இரத்தம்கூட மிச்சமில்லை.  பதிலாக இரத்த குழாய்களில்,தமனிகளில்  குளிர்ந்த  உப்புநீர் நிறைந்து நிற்கிறது. மருத்துவ சொல்லாடலில் இந்த நிலையினை மரணம் என்று சொல்லுவர். ஆனால் நவீன மருத்துவம் இதனை உறைநிலை உறக்கம் என்று சொல்கிறது. உயிருக்கு சற்று நேரம் மட்டும் ஒய்வு. சில மணி நேரத்திற்கு பின் தமனிகளில் உள்ளஉப்புநீரை வெளியேற்றி மீண்டும் இரத்தத்தை செலுத்திய பின்  இதயம் மீண்டும் துடிக்க தொடங்குகிறது. மூளை தன் வேலைகளை  தொடர்கிறது.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதனுக்குள் உயிர்வந்து குடிகொள்கிறது. 

என்ன இதெல்லாம்...? ஏதாவது விட்டலாச்சாரியார் படம் பாத்துட்டு பதிவு எழுதுரீங்களான்னு கேட்காதீங்க. 
இது சாத்தியமாகும் நாள் தொலைவில் இல்லை. அறிவியல் சார்ந்த கற்பனை கதைகளில் மட்டுமே நாம் 
படித்து வந்த, நூறு சதவிகிதமும் சுத்தமான பொய் என்று தோன்றும் இந்த மருத்துவ சிகிச்சை முறையில் 
மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உலகம் தயாராகி விட்டது. 
எமர்ஜென்சி பிரசர்வேஷன் & ரீசஸிட்டேஷன் என்ற பெயருடைய இந்த சிகிச்சை முறை விபத்தில் 
டுகாயம் அடைபவர்களும் மாரடைப்பு நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சை வேண்டுபவர்களும் 
எதிர்பார்க்கும் புதிய வழி சிகிச்சையாகும். மிருகங்களில் நடத்திய சோதனைகளில் இந்த சிகிச்சை 
முறை 90 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது.

ஒரு விபத்தில் படுகாயமடைந்த அல்லது மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு எவ்வளவு விரைவாக 

மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதோ அந்த அளவு அவரது உயிருக்கு ஆபத்தும் குறைகிறது. நேரம் 
அதிகரிக்க அதிகரிக்க உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைகிறது. விபத்தில் ஏற்படும் இரத்த இழப்பு, 
கை, கால் எலும்பு முறிவுகள் ஏற்படுவதுடன் உள் அவயங்களான ஈரல், சிறுநீரகம் போன்றவையும் 
சில சமயம் பாதிப்படையலாம். இங்கு சிகிச்சைக்கான நேரம் மிக முக்கியம். துரதிஷ்டவசமாக 
விபத்தில் சிக்கியவருக்கு அது கிடைப்பதில்லை..அதற்கு சரியான தீர்வுதான் இந்த 
"உறைந்த உறக்க" சிகிச்சை முறை. 

விபத்து நடந்தவுடன் விபத்தில் சிக்கியவருக்கு எற்படும் காயம் மற்றும் இரத்த இழப்பினை கருத்தில் 
கொண்டு அவரது உடலில் இருந்து இரத்தத்தை நீக்கி குளிர்ந்த உப்பு நீரை ஏற்றியபின் சிகிச்சை 
தொடங்குகிறதுஉப்பு நீரை எற்றியபின் உடலின் வெப்பநிலை 20 டிகிரியாக குறைகிறது. உடனடியாக 
மூளையும், இருதயமும் அமைதியாக தத்தமது வேலைகளை நிறுத்தி வைக்கிறது. உடலுக்கு 
தேவைப்படும் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. மருத்துவ அறிவியலின்படி 
ஆளு “டிக்கெட் வாங்கிட்டாரு”. இந்த சமயத்தில் உடலில் ஏற்பட்ட காயங்களில் தையல் போடுவது 
மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்ற வேலைகள் நடக்கும். இந்த சமயத்தில் என்ன 
செய்தாலும் உடல் சலனமில்லாமல் இருக்கும். எல்லாம் முடித்த பிறகு உப்பு நீரை வெளியெற்றி 
மீண்டும் இரத்தம் ஏற்றப்படும். இருதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கும். மூளை வேலை செய்ய தொடங்கும். 
இடைவேளை முடிந்து திரைப்படம் தொடங்குவது போல் உயிர் மீண்டும் உடலுக்கு திரும்பிவரும். 

இந்தமாதம் அமெரிக்காவில் பென்சில்வானியாவில் உள்ள யூனிவெர்சிட்டி ஆப் பிட்ஸ்பர்க் மெடிக்கல் 
சென்டரில் Dr.சாமுவேல் டிஷ்மான் தலைமையில் மருத்துவர்கள் விபத்தில் சிக்கி அவசர சிகிச்சை 
தேவைப்படும் 10 நபர்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த சிகிச்சையினை கையாளப் போகின்றனர். 
14 ஆண்டுகளுக்கு முன் Dr.பீட்டர் ரீ கண்டுபிடித்த இந்த வித்தை எலிகள் மற்றும் பன்றிகள் மீது 
வெற்றிகரமாக நடத்திய பரிசோதனை இனி மனிதர்கள் மீதும் நடத்த தீர்மானிக்க பட்டுள்ளது. 
இந்த முறையில் உடலை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. சில மணி நேரத்துக்கு 
மட்டுமே பாதிகபட்டவரை உறைந்த உறக்கத்தில் வைத்திருக்க முடியும். 
என்றாலும் அவசர சிகிச்சைக்கு அந்த நேரமே போதுமானதாகும்..
கீழே கொடுத்துள்ள இணைய முகவரியில் இதைப்பற்றிய இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன.


http://www.newscientist.com/article/mg22129623.000-gunshot-victims-to-be-suspended-between-life-and-death.html



இதன் விளக்கம் வீடியோ வடிவில் கீழே





பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் "காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடாஎன்று ஒரு 
பாடல் உண்டு. அமெரிக்க டாக்டர்கள் அந்த பாட்டை கேட்டு இந்த ஐடியாவ யோசிச்சிருப்பாங்களோ......?