வியாழன், ஜூலை 30, 2015

அஞ்சலி - கலாம் அவர்களுக்கு சலாம்





20 வருடங்களுக்கு முந்தைய எனது பள்ளிக் கல்லூரி 
காலங்களில் மாணவர்களின் மீது நம்பிக்கையும் அக்கறையும் 
கொண்ட தலைவர்கள் யாரும் இருந்ததாக ஞாபகம் இல்லை. 
தங்கள் அரசியல் சுயநலன்களுக்காக மாணவர்களை பயன்படுத்தும் 
தலைவர்களை மட்டுமே கொண்ட நம் நாட்டில் மாணவர்களின் 
கையில் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை அவர்களுக்கு 
எடுத்து சொல்லி கொடுத்து பிரதிபலனாக அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் மட்டுமே பெற்றுக்கொண்டு மாணவர்களின் 
நவீன மகாத்மாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். 

இந்த விஞ்ஞானியான மெய்ஞானியைப் பற்றி நான் அதிகம் 
அறியாமல் போனது வருத்தமாக உள்ளது. உண்மையில் 
வெட்கப்படுகிறேன். அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள 
வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

கடந்த 15 வருடங்களாக இணையத்தை பயன்படுத்துகிறேன். 
ஆனால் இணையத்தின் மூலம் இதுபோல எந்த ஒரு மனிதருக்கும் மக்கள் இந்த அளவு மரியாதையும் அன்பும் செலுத்தியதை 
பார்த்ததில்லை. கடந்த மூன்று நாட்களும் ட்விட்டர், ஃ பேஸ்புக், வாட்ஸ் அப் என இணையம் மட்டுமல்லாது, அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலும் அவரை பற்றிய செய்திகளும் அவருக்கான 
அஞ்சலி கவிதைகளும் நிரம்பி வழிகின்றது. 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

செவ்வாய், ஜூலை 14, 2015

கண்ணீர் அஞ்சலி

 




மனம் வருந்தி எழுத வார்த்தைகள் இல்லை. அதனால் மெல்லிசை மன்னனின் ஆத்மா சாந்தியடைய என் மனதுக்குள் அழுது பிரார்த்தித்து கொள்கிறேன்

வெள்ளி, ஏப்ரல் 03, 2015

அன்புத் தொல்லை.....

"யார் நீங்க.? என்ன வேணும் உங்களுக்கு..?"

"இப்படி குறுக்கே நிக்காதீங்க. கொஞ்சம் வழி விடுங்க.."

"கன்னா பின்னான்னு பெனாத்திக்கிட்டு ஏன் என் பின்னாடியே வரீங்க..? என்னை கொஞ்சம் போக விடுறீங்களா..?"  

"நான்தான் நீங்க யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்ல. திரும்பவும் ஏன் என்ன தொல்லை பண்றீங்க..?"

"இப்படி வழிமறிச்சு நிக்காதீங்க. என்ன போக விடுங்க. தள்ளி நில்லுங்க. இனிமே உங்க சகவாசமே வேண்டாம்".

"இது  பெரிய தொல்லையா போச்சே. உங்ககிட்டதானே சொல்றேன். எனக்கு நீங்க யாருன்னே தெரியாது. உங்களை எனக்கு இப்ப சுத்தமா பிடிக்கலை. தள்ளி நில்லுங்க நான் போறேன்".

"உங்களோட பழகின நாட்களை எல்லாம் நான் வெறுக்கிறேன். திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு  என் பின்னாடி வராதீங்க". 

"இப்படியெல்லாம் பேசி என்னை  தர்மசங்கடத்தில ஆக்காதீங்க. வேண்டாம் அதெல்லாம் சரியாகாது. இனிமேலும் உங்க தொல்லைய என்னால சகிச்சுக்க முடியாது. நீங்க போயிடுங்க".

"வேண்டவே வேண்டாம்....போயிடுங்கன்னு சொல்றேன்ல"

"நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது.. ஆனா....?"

"நீங்க மறுபடியும் கஷ்டப்படுத்த மாட்டீங்கன்னு சொல்றத நான்
நம்பறதா இல்ல. உங்களால அழுது அழுது என் கண்ணீரெல்லாம் வத்தி வறண்டிருச்சு...திரும்பவும் நீங்க கஷ்டப்படுத்தினால் எனக்கு அழக்கூட திராணியில்ல".

"இங்க நிக்காதீங்க.. போயிடுங்க.. நான் உங்க கூட வர முடியாது".

"அதெல்லாம் சரிதான். இருந்தாலும்...."
 
"வேணாம்..நான் வந்தாலும் எல்லாம் பழையமாதிரி நல்லபடியா அமையறது ரொம்ப கஷ்டம்".

"இப்பவும் என்னை நீங்க சரியா புரிஞ்சுக்கல.. எனக்கு மட்டும் கவலை இல்லைன்னு நினைக்கிறீங்களா...?"

"சரி நான் வருகிறேன். என்னை நேசிக்கும் உங்களுக்காக வருகிறேன். எனக்கும் உங்க மேல ரொம்ப பிரியம்".
 
"உங்களை என்றென்றைக்குமாய் பிரிந்து போக நினைத்த என்னை திரும்ப
கூட்டிச் செல்ல நீங்கள் வந்ததில ரொம்ப சந்தோசம்".

"இனிமேல் என்னை கஷ்டப் படுத்தக் கூடாது.."

"இல்லை இனிமேல் சத்தியமா நான் உங்கள விட்டு போகமாட்டேன்".

"தொல்லை பண்ணிக்கொண்டு உங்க கூடவே இருப்பேன்".


 
 

புதன், ஏப்ரல் 01, 2015

முட்டாள்கள் தினம்

அகில உலக  முட்டாள்களே
மதியில்லா மடையர்களே
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வந்ததே இன்று
முட்டாள்கள் தினம்
இது நமக்கே உரிமையான
ஒரு சுப தினம்
ஒற்றுமையாய் நாமெல்லாம்
ஒன்று கூடியே - இதை
கொண்டாடுவோம்
ஆனந்த கூத்தாடுவோம்
கூவிச் சொல்லிடுவோம்
முட்டாள்கள் வாழ்க வாழ்க
பல்லாண்டு வாழ்க
மடையர்கள் வளர்க வளர்க
நோய்நொடியில்லாமல் வளர்க
 

புதன், மார்ச் 25, 2015

கிரிகெட் புதிர்

கிரிகெட் எப்பவுமே ஒரு கணிக்கவே முடியாத ஒரு விளையாட்டு. எப்ப என்ன நடக்கும் எந்த அணி ஜெயிக்கும் எந்த அணி தோற்கும் என்பதை சொல்லவே முடியாது. நல்லா ஆடுறவன் திடீர்னு அவுட் ஆவறதும்,  டம்மியா ஆடுறவன் கடைசி பந்தில் சிக்சர் அடிச்சு  மேட்ச்ச ஜெயிச்சு குடுக்கறதும், உறுதியா ஜெயிச்சிரும்னு தோன்றும் ஒரு ஒரு அணி கடைசி ஓவர்ல தோத்து போறதும் சர்வ சாதாரணமா நடக்கும். இப்படி இன்னும் பல விதமான கிரிகெட் ஆட்டங்களையும், முடிவுகளையும் நீங்க பாத்திருப்பீங்க.

தற்போது நடைபெறும் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகின்றது. 2011 ஆண்டு நடந்த போட்டியைப் போலவே  இந்த முறையும் வெற்றிபெற்று  கிரிகெட் உலக கோப்பையை 
தக்க வைத்து கொள்ளும் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல.
இந்திய கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் அதைத்தானே விரும்புவர்.



தற்போதைய இந்த கிரிகெட் பரபரப்பில் உங்களுக்கு ஒரு கிரிகெட் புதிர். 
 
இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்குற ஒரு கற்பனை 
ஆட்டம். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  அற்புதமாக  விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய
இந்திய அணி தொடக்கத்தில் சற்று பதறியபடி ஆடி சொற்ப
ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் 
விராட் கொஹ்லியும் சுரேஷ் ரெய்னாவும் தங்களது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றியின் 
விளிம்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். 
 
இப்ப ஸ்கோர் போர்ட பாருங்க

இந்தியா 49.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள்.  விராட் கொஹ்லி (நாட் அவுட் - 198 ரன்கள்)  சுரேஷ் ரெய்னா (நாட் அவுட் - 97 ரன்கள்)

இந்திய அணி வெற்றிபெற  இன்னும் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே தேவை. வெற்றி எளிதாகிவிட்ட இந்த நேரத்தில் விராட் கொஹ்லிக்கு திடீரென  ஒரு யோசனை தோன்றியது. ரெய்னாவிடம் அதை சொன்னதும் அவன் மகிழ்ச்சியுடன் அதை ஒத்துக் கொண்டான்.
 
அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிறார் விராத் கொஹ்லி.
5 வது பந்தும் 6 வது பந்தும் வீசி முடித்தபின் ஆட்ட முடிவு இப்படி வருகிறது

இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 
விராட் கொஹ்லி இரட்டை சதம். சுரேஷ்  ரெய்னாவும் சதம் அடித்தார்.

வெற்றி பெற இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இது  எப்படி சாத்தியமாயிற்று. விடை தெரிந்தால் சொல்லுங்களேன் 


 

சனி, பிப்ரவரி 14, 2015

பிரியமானவளே


என் அன்பே உன்னுடன் சேர்ந்து செல்ல நானும் இருந்தேனே...
பொறுமையுடன் காத்திருந்து என்னைக் கைப்பிடித்தபோது
நீயடைந்த அளவில்லா மகிழ்ச்சியை உன் முகத்தில் கண்டேனே...
உன் பயணத்தில் என்னை கையிறுக்கிபிடித்தபடி இருந்தாயே..
உன்னுடன் நானிருக்கும் கர்வம் உன் விழிகளில் கண்டேனே ...
என்மீது நீ காட்டிய பிரியமெல்லாம் ஒரு கணத்தில் 
தவிடுபொடியாய் விடுமென ஒருபோதும் நினைக்கலையே
உன்னுடைய சுயரூபத்தை என்னிடமே காட்டிவிட்டாயே..

உன் பயணம் முடிந்ததும் அந்த கோட்டு போட்டவன் கேட்டான்னு 
என்னை முழுசா கொடுத்திட்டு நீ பாட்டுக்கு போயிட்டீயே.. 
இது நியாயமா..?. 

அதுசரி... இதுக்குமேல ஒரு ரயில் டிக்கெட் 
உங்கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்......?