திங்கள், செப்டம்பர் 29, 2014

படித்தபடி... ரசித்தபடி...சிரித்தபடி....3


அலுவலகத்தில் இரண்டு பெண்களின் உரையாடல்

ஒருத்தி: நேத்து சாயந்திரம் ரொம்ப ஜாலியா இருந்தது. உனக்கு எப்படி?

மற்றவள் : அதையேன் கேக்கறே...? செம்ம கடுப்பு. என் புருஷன் வேலையில் இருந்து திரும்பி வந்ததும் சாப்பிட்டு உடனே படுத்து தூங்கி விட்டார். நீ உன் கதைய சொல்லு.

ஒருத்தி : ரொம்ப சந்தோசமா இருந்தது. அவர் ஆபீசில் இருந்து வந்ததும் டின்னருக்கு என்னை வெளியே கூட்டிபோனார். அது முடிஞ்சதும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே நடந்தோம். வீட்டுக்கு வந்ததும் பெட்ரூமில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து ரொம்ப நேரம் பேசினோம். எல்லாம் கனவு மாதிரி இருந்தது.

அதே சமயம் வேறு அலுவலகத்தில் இவர்களது கணவர்களின் உரையாடல்

ஒருவன்: நேத்து சாயந்திரம் என்னப்பா விசேஷம்.?

மற்றவன் : சூப்பர்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனதும் டைனிங் டேபிள்ள சாப்பாடு ரெடியா இருந்தது. சட்டுபுட்டுனு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கிட்டேன். உனக்கு எப்படி?

ஒருவன் : ரொம்ப பேஜாரா போச்சுப்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா வீட்ல கரண்ட் இல்லை. கரண்ட் பில் கட்டாததால் EB காரன் பீஸ புடுங்கிட்டு போயிட்டான். சரின்னு பொண்டாட்டிய கூட்டிகிட்டு ஹோட்டலுக்கு போயி சாப்பிட்டேன். கையில இருந்த காசெல்லாம் ஹோட்டல் பில்லுக்கே சரியா போச்சு. திரும்பி வரும்போது ஆட்டோக்கு குடுக்ககூட காசில்ல. நடந்தே வர வேண்டியதாச்சு. வீட்டுல கரண்ட் இல்லாததால தூக்கமே வரல. இருந்த ஒன்னு ரெண்டு மெழுகுவர்த்திய கொளுத்தி வச்சுக்கிட்டு தூக்கம் வரவரைக்கும் பேசிகிட்டு இருந்தோம்.

 

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

ஏன்னா நான் ரொம்ப உஷார்


என் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் செய்யும்போது நான் ரொம்ப உஷாரா இருப்பேன். (பயம் இல்லைங்க, ஹீ..ஹீ..மரியாதை... மரியாதை..) சரக்கடிப்பது அவளுக்குப் பிடிக்காது. அதனால் மனைவியின் மீது மரியாதை தோன்றும் சமயங்களில் கொஞ்சம் சரக்கு அடிப்பதுண்டு. அப்போது நான் ரொம்ப உஷாரா இருப்பேன்.

வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய நேரம். வீட்டில் பிள்ளைகள் அவர்களுடைய அறையில் படித்துக்கொண்டிருந்தனர். 
மனைவி சமையல் செய்து கொண்டிருந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் கடமுடாவென ஓசையுடன் மோதி விளையாடிக் கொண்டிருந்தன. வாசலைத் தாண்டி உள்ளே சென்ற நான் மெதுவாக ஹாலில் அலமாரியில் மறைத்து வைத்திருந்த ஸ்காட்ச் பாட்டிலை எடுத்தேன். சுவரில் மாட்டியிருந்த போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னை உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. வேறு யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டேன். ஏன்னா நான் எப்பவும் ரொம்ப உஷார். வாஷ் பேசின் மேலே உள்ள பிளாஸ்டிக் ரேக்கிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்து மடமடவென ஒரு கட்டிங் ஊற்றிக் குடித்தேன். கிளாஸை வாஷ்பேசினில் கழுவி மீண்டும் பிளாஸ்டிக் ரேக்கில் பத்திரமா வைத்தேன். ஆங்..ஆங்.. வச்சாச்சு.... ஸ்காட்ச் பாட்டிலையும் பத்திரமா அலமாரியில் ஒளிச்சு வச்சாச்சு. போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னைப் பார்த்து சிரித்தது.

மெதுவா சமையலறைக்குள் நுழைந்தேன். மனைவி சமையலுக்கு உருளைக்கிழங்கு நறுக்கிக் கொண்டிருந்தாள். யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

நான்: "என்னம்மா இன்னிக்கு ராத்திரிக்கு சமையல்?'
மனைவி: "சப்பாத்தியும்,உருளைக்கிழங்கு குருமாவும்?"
நான்: "சித்தப்பா போன் பண்ணினாங்களா?. அவுங்க பையனுக்கு வேலை கெடச்சுதா?"
மனைவி: "எங்க கெடச்சுது. அவன் சும்மா ஊரை சுத்திக்கிட்டு இருக்கான்".

நான் சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன். மீண்டும் ஹாலில் அலமாரிக்கு அருகே சின்ன சப்தங்கள். ஆனா அது நான் அலமாரியில் இருந்து  ஸ்காட்ச் பாட்டில் எடுக்கும் சவுண்டு இல்ல. வாஷ் பேசின் மேல உள்ள பிளாஸ்டிக் ரேக்கில் இருந்து கிளாஸ மெதுவா எடுத்து கடகடவென இன்னொரு கட்டிங் அடிச்சு முடிச்சேன். பாட்டிலை கழுவி வாஷ் பேசின்ல வச்சிட்டேன். பிளாஸ்டிக் கிலாஸ பத்திரமா அலமாரிக்குள்ள வச்சிட்டேன். இப்பவும் யாரும் பார்க்கல. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

மீண்டும் மனைவியிடம் சென்று, "அவன் சின்னப் பையன் தானே, அப்படித்தான் இருப்பான்".
மனைவி: "ம்.... சின்னப் பையனா..? மூணு கழுதை வயசாச்சு.காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப்போகுது".
நான்: "ஆமா. நான் மறந்தே போயிட்டேன். இப்பத்தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு".

நான் மீண்டும் திரும்பி வந்து உருளைக்கிழங்கை அலமாரியில் இருந்து வெளியே எடுத்தேன். ("ச்சே அலமாரியை யாரோ இடம் மாத்தி வச்சிருக்காங்க"). ரேக்கிலிருந்து ஸ்காட்ச் பாட்டில எடுத்து ஒரு கட்டிங் வாஷ் பேசினில் ஊற்றி மடமடவென குடித்து முடித்தேன். போட்டோவில் இருந்த கரடி பொம்மை என்னைப் பார்த்து சத்தமாக சிரித்தது. நான் ரேக்க எடுத்து  சமையலறைக்குள்  வைத்துவிட்டு சப்பாத்தியை கழுவி பிளாஸ்டிக் அலமாரில பத்திரமா வைத்தேன். மனைவி இன்னும் வாஷ் பேசினில சமையல் பண்ணிக் கொண்டு இருந்தாள். இப்பவும் யாரும் பார்க்கல. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

நான்: (சற்று கோபத்துடன்), "எங்க சித்த்தப்பா பையனை நீ கழுதைன்னா சொல்லுறே, பிச்சிடுவேன் பிச்சி"
மனைவி: "சும்மா வளவளன்னு பேசாம போய் உக்காருங்க".

நான் மீண்டும் அலமாரிக்குள் சென்று ஸ்காட்ச் பாட்டிலுக்குள் இருந்த சப்பாத்தியை எடுத்து இன்னொரு கட்டிங் குடித்தேன். வாஷ் பேசின நல்லா கழுவி பிளாஸ்டிக் ரேக்கில வச்சிட்டேன். போட்டோவில் இருந்து மனைவி என்னைப் பார்த்து இன்னும் சத்தமா சிரிச்சது. கழுதை பொம்மை இன்னும் சமையல் செய்து கொண்டிருந்தாள். ஆனா யாரும் என்னை பார்க்கவில்லை. ஏன்னா நான் ரொம்ப உஷார்.

நான்: "அப்படீன்னா கரடிக்கு இன்னும் வேலை கிடைக்கலையா...?"
மனைவி: "ஏங்க போயி நல்லா தண்ணி ஊத்தி முகம் கழுவுங்க".

நான் மீண்டும் சமையறைக்குள் சென்று ரேக்கின் மீது அமைதியாக உட்கார்ந்தேன். இந்த ஸ்டவ்வ ஏன் ரேக் மேல வச்சிருக்கான்னு தெரியலை. வெளியே பாட்டில்கள் மோதி உருளும் ஓசை கேட்டது. மெதுவா எட்டிப்பார்த்தேன். மனைவி ஒரு கட்டிங் மடமடவென குடித்து முடித்ததை பார்த்தேன். நல்லவேளை எந்த கழுதையும் இதைப் பார்க்கவில்லை. ஏன்னா கரடி பொம்மை  ரொம்ப உஷார். சித்தப்பா இன்னமும் சமையல் செய்து கொண்டிருந்தாள். போட்டோவில் இருந்த நான் மனைவியை பார்த்து பலமாக சிரித்தேன்.
"ஏன்னா நான் ரொம்ப உஷார்".

வெள்ளி, செப்டம்பர் 05, 2014

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

இந்த 100 நாட்களில் பிரதமர் மோடியின் ஆட்சியில் எனக்கு பிடித்தது என்ன என்று ஒரு கேள்வி.

விசுAwesomeமின்துணிக்கைகள் வலைப்பதிவில் இந்த கேள்வியை கேட்டு என்னை தொடர் பதிவெழுத அழைத்தவுடன் ரொம்ப நேரம் யோசனை செய்யாமல் எழுதிய பதில்கள் இவை. அரசியல் பற்றி பேச எழுத எதுக்குங்க யோசனையெல்லாம் பண்ணி நேரத்த வேஸ்ட் பண்ணனும். சரி இப்ப பதில்களைப் படிங்க

1. திட்டக் கமிஷனைக் கலைத்தது. (ஆளே இல்லாத கடையில இன்னும் யாருக்குப்பா டீ ஆட்டிகினு இருக்கே)

2. தமிழக கட்சிகளைப் போலல்லாமல் முந்தைய அரசின் நல்ல திட்டங்களை முடக்காமல் தொடர்ந்து நடத்துவது

3. காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு கட்சியின் தவறுகளை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளித்தது (திருத்தி கொண்டார்களான்னு கேட்கக்கூடாது).

4. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் விதத்தில் மக்களவை அடிதடிக் கலவரங்கள் ஒத்திவைப்புகள் எதுவும் இல்லாம இந்த 100 நாளும் நடத்தி முடித்தது. இதற்கு முக்கிய காரணம் முந்தய காங்கிரஸ் கட்சியில் இருந்த மந்திரிகள் ஆளாளுக்கு ஒரு கோஷ்டியா தனி தனி அரசாங்கமா செயல் பட்டாங்க. மோடியின் மந்திரிசபை இன்னும் (இந்த 100 நாளில்) அந்த நிலையை அடையவில்லை

5. எல்லாத்துக்கும் மேல தலைநகர் டெல்லியில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு மறந்துவிடாமல் இருக்கச் செய்வது

//// இந்த கேள்விக்கு நான் மட்டும் பதில் அளிக்காமல் எனக்கு தெரிந்த மற்றும் ஒரு ஐந்து பதிவர்களிடமும் வைக்கின்றேன். இந்த பதிவர்களும் , இதற்க்கு பதில் கூறிவிட்டு, அவர்களுக்கு அறிமுகமான 5 பதிவர்களுக்கு இந்த கேள்வியை கேட்டு வைக்குமாறு தயவு கூறி கேட்டு கொள்கிறேன். ////

ஒரு கேள்விக்கு எதுக்கு 5 பதில்ன்னு கேக்குறீங்களா.....? அது ஒண்ணுமில்லீங்க. எனக்கு அறிமுகமான பதிவர்களை அரசியல் கேள்வி கேட்டு தொல்லை தர விருப்பமில்லாததால் 5 பதில்களையும் நானே அளித்துள்ளேன்.

இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும். பசங்க பாடத்துல படிப்பாங்க. நமக்கு சிலை வைப்பாங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா