வெள்ளி, ஜூன் 27, 2014

பதில்களை மாற்றிவிடும் கேள்விகள்

ஒரே கேள்விய பல பேரிடம் கேட்கும்போது விதவிதமா பலவிதமா பதில்கள் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனா ஒரே கேள்விக்கு ஒருவரே பலவிதமா பதில் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமெடியில், "அப்போ இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கியே, நீங்க எத்தனை பேருடா இருக்கீங்க?" ன்னு கேட்கும்போது அவர் "யோவ், வெளியில தெரியறது ஒரு ரூபம், ஆனா உள்ள திரியறது பல ரூபங்கள். அதையெல்லாம் வெளியில விட்டா பூமி தாங்காதேன்னு உள்ள ஒரு ஓரமா படுக்கப்போட்டிருக்கோம், அதனாலதான் நாங்க நாங்கன்னு சொல்லிட்டிருக்கோம்" என்று  சொல்லுவார். நெனச்சுப்பாத்தா நமக்குள்ளே பல ரூபங்கள் இருப்பது உண்மைதான்.
இந்த ரூபங்கள் அவரவருடைய வயதையும் அனுபவத்தையும் பொறுத்து
உருவம் கொண்டு வெளிவந்து நடமாடுகிறது. உங்களுக்கு உதாரணம் வேண்டும் என்றால் கீழே உள்ள கேள்வி பதில் பட்டியலை பாருங்க. ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய பல ரூபங்கள் சொல்லுற வேற வேற பதில்களைப் பாருங்க.

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?


பதில்கள் - 10 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அப்பாவும், அம்மாவும் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: கணக்கு டீச்சர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பரீட்சை தொடங்கிய நாள் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: ஸ்கூல் லீவு விட்ட போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: பசங்க கூட விளையாடுவது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: இப்பவே வளர்ந்து பெரியவனா ஆயிடணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: கணக்கு பாடம் 

பதில்கள் - 17 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என்னோட நண்பன் ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சதீஷ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: பள்ளிகூடத்தில் நடந்த பிரிவுபசார தினத்தன்று.
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: +2 பரீட்சையில் நல்ல மார்க்குடன் பாஸ் பண்ணின போது. 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: FACEBOOK 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்லா படிக்கணும். நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணனும். ஊழலை ஒழிக்கணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: நமது சமுதாயம் அலட்சியத்துடன் இருப்பது

பதில்கள் - 18 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி......இல்லை இல்லை ராஜேஷ்
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அப்படியெல்லாம் இல்லை எல்லாரையும் பிடிக்கும்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: விடுமுறையில் உள்ள கல்லூரி நாட்கள்.  
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி என்கிட்டே முதல் முதலா பேசினப்ப
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சாட்டிங் 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: நல்ல வேலையில் சேரவேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: சந்தேகமே வேணா....பரீட்சையேதான்.

பதில்கள் - 22 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: அவளோட அப்பா 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்து சுபாஷினியை பிரிந்து ஹைதராபாத் போனபோது
கேள்வி உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சுபாஷினி சம்மதம்னு சொன்ன போது
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: சுபாஷினியோட கூட இருக்கணும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: சுபாஷினியை திருமணம் செய்வது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவுமே இல்லை 

பதில்கள் - 26 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: ராஜேஷ் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: சுபாஷினி 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அதை ஞாபகப்படுத்தாதீங்க. பிளீஸ் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: அப்படியெல்லாம் எதுவும் இல்லை
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஏதாவது செய்தபடி இருக்கணும். சும்மா இருந்தா ஒண்ணொண்ணா ஞாபகம் வந்துண்டே இருக்கும்.
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: ஒரு கனவும் இல்லை. எல்லாம் கலைந்துவிட்டது 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: இன்னொரு தடவை காதல் / கல்யாணம் 

பதில்கள் - 28 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: அம்மா 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: ஆபீசில் கூட வேலை செய்யும் பிரதீப் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: அப்பாவோட மரணம் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: வேலை கிடைத்தபோது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: ஓவர் டைம் வேலை செய்வது 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: கொஞ்சம் பணம் காசு சேர்க்க வேண்டும் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: எதிர்கால வாழ்க்கைதான் 

பதில்கள் - 38 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் மகன் அம்ருத் 
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என்னோட ஆபீஸ் மேனேஜர் 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: ஆபீசில லீவு கேட்டு கிடைக்காதபோது 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: சம்பளம் வாங்கும்போது 
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பது  
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: குழந்தைகளின் எதிர்காலம் 
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: விலையேற்றம் 

பதில்கள் - 59 வயதில்

கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடித்த நபர் யார்?
பதில்: என் பேத்தி சுவேதா  
கேள்வி: உங்களுக்கு சுத்தமா பிடிக்காத நபர் யார்?
பதில்: என் மகனோட மனைவி  
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக துன்பமான தருணம் எது?
பதில்: வேலையிலிருந்து ஒய்வு பெற்ற நாள். 
கேள்வி: உங்கள் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எது?
பதில்: பேத்தி சுவேதா பிறந்த போது  
கேள்வி: பிடித்த பொழுது போக்கு என்ன?
பதில்: இப்போ செய்வது எல்லாமே பொழுத போக்கறதுக்குத்தானே 
கேள்வி: உங்களது மிகப் பெரிய கனவு எது?
பதில்: யாருக்கும் தொல்லை கொடுக்காம போயி சேரணும்.
கேள்வி: ரொம்பவும் பயப்படும் விஷயம் எது?
பதில்: மகனுக்கு ஜாதகதோஷம் நெறைய இருக்கு. ஆனா அவனுக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கையே இல்லை. அதை நினைசாதான் பயமா இருக்கு 

புதன், ஜூன் 25, 2014

என்ன வார்த்தை சொல்வீரா...?

அது இரண்டெழுத்துகள் மட்டும் கொண்ட ஒரு வார்த்தை. இருப்பினும் ஆறு எழுத்துக்கள் கொண்டு எழுதுகிறார்கள். சிலமுறை நான்கு எழுத்திலும் எப்பொழுதாவது ஏழு எழுத்துகளுடனும் எழுதப்படும். ஆனால் மூன்றேழுத்தில்தான் நாமெல்லோரும் எழுதுகிறோம்.

செவ்வாய், ஜூன் 24, 2014

எலி, ஒலி, வலி, கிலி

சின்ன வயசில அருணுக்கு போலீஸ்னா ரொம்ப பயம். பள்ளிக்கூடம் போற வழியில் இருந்த காவல் நிலைய வாசலில் கத்தி சொருகி வச்சிருக்கும் ஒரு துப்பாக்கியுடன் பாரா நிற்கும் போலிஸ்க்காரரை பார்த்ததும் மெதுவாக நடக்கும் அவனது கால்கள் தானாக வேகம் எடுக்கும். ஆனா இப்ப பெரியவனா வளர்ந்த பிறகு பயம் குறைந்துவிட்டது. சொல்லப்போனா இப்பல்லாம் கடுமையான வெயிலிலும் மழையிலும் கடமையே கண்ணும் கருத்துமாக அவர்கள் பணி செய்வதை பார்க்கும்போது சிலசமயம் அவுங்க மேல ஒரு பரிதாபம் கூட தோன்றுவதுண்டு என்று சொன்னால் மிகையாகாது.

பயமறியாத இளங்கன்றாக சுத்திவந்த அவனோட எரியாவில ஒரு நாள் கொஞ்சம்  வசதியோடும் செல்வாக்கோடும் இருந்த ரியல் எஸ்டேட் சொர்ணாக்கா வீட்டிற்குள் ஒரு நிறைஞ்ச அமாவாசை ராத்திரியன்று சொர்ணாக்கவோட சொத்துகஜானாவின் பாதுகாப்பு அம்சங்களின் உறுதியினை சோதனை செய்யும் உயர்ந்த நோக்கத்துடன் புகுந்த ஒரு திருடன் கொஞ்சம் காசு, பணம், துட்டு, MONEYகளை களவாடிக்கொண்டு ஓடிப்போனான்.

EMI ஆக வரும் மாமூல் அளவும் சொர்ணாக்காவின் செல்வாக்கும் அதிகம் என்பதால் ஏரியா எஸ்.ஐ இந்த கேஸ நேரடியா விசாரணைப் பண்ணத் தொடங்கினார்.

ஆள் யாருமே இல்லாமல் விசாரணைப் பண்ணுவது சிரமம் என்பதால், தூக்கம் வராததால் இரவில் தெருவில் சுற்றித் திரிந்தவர்களும் முந்தைய திருட்டு சம்பவங்களில் பிடிபட்டு வெளியே வந்திருக்கும் சில நல்லவர்களும் நலம் விசாரித்து விருந்துபசாரம் அளிப்பதற்காக பூரண மரியாதைகளுடன் எரியா காவல் நிலையத்திற்கு  அழைக்கப்பட்டனர்.

இந்த சமயத்தில் அருண் வீட்டில் பெயின்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. வேலை செய்துகொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் போலிஸ் தயாரித்த நல்லவர்களின் பட்டியலில் தங்களது பெயரும் உள்ளதென அறிந்தவுடன், அவசரமா ஊருக்கு போக வேண்டியுள்ளது எனக்கூறி அன்றைய தினக்கூலியை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆயினர். அன்றைய பொன்மாலைப் பொழுதிலேயெ இவங்களை கேட்டு அருண் வீட்டுக்கு போலிஸ் வந்தது. இதை எற்கனவே எதிர்பார்த்த மாதிரி  பெயிண்டிங் மேஸ்திரி அதிகமா பேசி உளறி மாட்டிக்க விரும்பாமல் “சாப்பாட்டுக்கு போனானுங்க சார். இன்னும் வரலன்னு” சொல்லி அனுப்பினார். யார் வந்து கேட்டாலும் இதையே சொல்லுங்கன்னு அருண் வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லி வச்சிருந்தார்.

அடுத்த நாள் பெயின்டிங் வேலைக்கு யாரும் வரவில்லை. பயமறியாத இளங்கன்றான அருண் காலேஜுக்கு கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் எஸ்.ஐ. நாலஞ்சு போலிஸ்காரர்களுடன் மீண்டும் வந்தார். பொறுமையாக முகத்தில் பதட்டம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அருண் வீட்டின் கேட் அருகில் சென்றான். தலைமறைவாகிவிட்ட (தலையோடு கூடிய கை, கால் உடம்பு எல்லாம் மறைவாகிவிட்ட) பெயிண்ட்டிங் சங்கத்தை பற்றிதான் அவுங்க கேட்ட சரமாரி கேள்விகள்.

ஜீப்பில் இருந்தபடியே, கான்ஸ்டபிள், "தம்பி நேத்து எத்தனை பேர் வேலைக்கு வந்தாங்க, முந்தா நாள் எத்தனைப் பேர் வந்தாங்க, அதுக்கு முந்தின நாள் எத்தனை.......? என கேள்வி மேல கேள்வியா கேட்டார். இத்தனை கெள்விகளை வரிசையா எதிர்ப்பார்க்காத காரணத்தாலும், பஸ் + சைட்டு எல்லாம் மிஸ்ஸாயுடுமோ என்ற அவசரத்திலும், அவனது நேரம் சரியில்லாததாலும் அருண் கொஞ்சம் தெனாவட்டா, “இதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சுக்கறது. எனக்கு எதுவும் தெரியாது” என்றான். அவனது வாய் மொழியும் உடல் மொழியும் போலீஸ் பார்வைக்கு வேற மாதிரி பட்டுவிட்டது.

கங்காவாக இருந்தவ சில நொடிகளில் சந்திரமுகியாக மாறுவதைப் போல் கான்ஸ்டபிள் முகம் சட்டென கொஞ்சம் கொடூரமாக மாறியது. ஜீப்பிலிருந்து ஒரே ஏத்தாக தாவி இறங்கி டால்பி டிஜிட்டல் சப்தத்தில் அவனிடம் கேட்டார், “உனக்கு எத்தனை வயசாகுதுடா....?” கான்ஸ்டபிளோட அந்த ரியாக்ஷனை பார்த்தவுடன் அதுவரைக்கும் “எப்பிடி இருந்த நான்" விவேக் கெட்டப்பில் நிமிர்ந்து நின்றிருந்த அருண் லைட்டா ஜகா வாங்கி “இப்பிடி ஆயிட்டேன்" விவேக் கெட்டப்புக்கு மாறி நின்றான். அவன் மனசுக்குள் சில பல பட்டாம்பூச்சிகள் ஒண்ணா சேர்ந்து பறந்தது. ஹார்ட் பீட் கன்னா பின்னான்னு தடுமாறி துடிப்பதை அனுபவித்தபடியே, ஸ்கூல் பையன் பேசற மாதிரி குரலை தாழ்த்தி சொன்னான், “19 வயசு சார்”, 
“91 வயசா ஆகிப்போச்சு....? என்று கேட்பதற்குத்தான் அந்தக் கேள்வி என்பது உடனே அவனுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை சப்தம் இன்னும் கொஞ்சம் முறுகலாக வந்தது. அருண் மிரண்டு விட்டான். அவனுக்கு மனசில படபடப்பு வந்துட்டா அப்புறம் அவன் செய்யும் செயல்கள் கோணல் மாணல் தான். 

எப்படியோ கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "என்னங்க சார் நீங்க என்னமோ நான்தான் திருடின மாதிரி விசாரிக்கிரீங்க", என்றான்,

ஓ!!!!! நீ திருட்டு கூட செய்வியா.....? திருட்டு நடந்தத விசாரிக்கத்தானே வந்திருக்கோம். ரொம்ப தெனாவட்டா பேசுற. கொஞ்சம் மரியாதையா கேட்கிற விவரங்களை நீயாக சொன்னால் உனக்கு நல்லது, இல்லன்னா நாங்க கேட்கிற விதத்தில கேட்க வேண்டியிருக்கும்”

அருண் டென்ஷன் ஆனான். பின் எதோ ஞாபகம் வந்த மாதிரி “சார் பெயின்டிங் வேலைக்காரர்களுக்கு கூலி குடுக்கிறதை ஒரு நோட்டில கணக்கு எழுதி வச்சிருக்கோம். அதை பார்த்தால் உங்களுக்கு விவரம் எல்லாம் தெரியும்” என்று கூறியதும் இல்லாமல் நோட்டு புக்கையும் கொண்டு வந்து கொடுததான். கணக்கு புத்தகத்தை பார்த்து விவரம் பார்த்துக் கொண்ட கான்ஸ்டபிள் அவனை மெலும் கீழும் கோபத்துடன் முறைத்துப் பார்த்தார். அப்பொதுதான் அவனுக்கு உறைத்தது. இவ்வளவு நெரம் மெஸ்திரி சொன்னமாதிரி 2 வெலைக்காரர்களும் சாப்பிட போய் திரும்பி வரவே இல்லைன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தோம். ஆனா நோட்டு புத்தகத்தில் அந்த 2 பெரும் கூலி வாங்கினதா எழுதி இருக்கு.

கான்ஸ்டபிள் அவனிடம் திரும்பவும் டால்பி டிஜிடலோடு கொஞ்சம் டர்போவும் சேர்த்துக்கொண்டு “ நெத்து அவனுங்க எப்ப போனான்னு சொன்னெ...?” என்று கேட்டதும் அருண் தலையை குனிந்து அவசரப்பட்டு கணக்கு புக்கை எடுத்துக் கொடுக்க ஐடியா கொடுத்த தன் சுயபுத்தியை நொந்து கொண்டான். போச்சு, இன்னிக்கி வசமா மாட்டிக்கிட்டோம், இன்னும் கொஞ்ச நெரத்தில தெருவு ஜனங்க முன்னாடி இந்த கான்ஸ்டபிள் நம்மள அடிச்சு வெளுத்து வாங்கப் போறாரு என்று நினைத்தான், கூடவே அடிவாங்கும் போது ஐயோ, அம்மா, அப்பா என்று விதவிதமா கத்தி கதறுவதற்கும் மனசுக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

ஆனா கான்ஸ்டபிள் அடிக்கவில்லை, மாறாக அவனை ஒரு குரூரப் பார்வை பார்த்துவிட்டு திரும்பி ஜீப்பில் இருந்த எஸ்.ஐ யிடம் “சார், பையன் பிஞ்சிலேயே பழுத்தவன் போல தெரியுது, இங்க வச்சு விசாரிச்சா வேலைக்கு ஆவாது, நம்ம ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயி நாலு தட்டு தட்டினா எல்லாத்தையும் தானா கக்கிடுவான்” என்றார்,

அதைக் கேட்டவுடன் அருண் இடி விழுந்தது போல் அதிர்ந்தான். அவனோட பேஸ்மென்ட் (அதாங்க.......அவனது கால்கள்) பூகம்பம் வந்த மாதிரி தட தடன்னு ஆட ஆரம்பித்தது. மயக்கம் போட்டு விழுந்திடுவது போல் உணர்ந்தான். இவுங்க இங்கயே இந்த மிரட்டு மிரட்டுறாங்களே...ஸ்டேஷனுக்கு போனா என்னா கதியாவோம்னு நினைத்தான்.

சுதாரிப்பதற்காக கண்ணை ஒருதரம் இறுக்க மூடினான். மெதுவாக திறந்தபோது சந்து முனையில் அவனுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு தலையின் பின்பாகம் விறு விறுவென போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தான். அதைப் பார்த்ததும் அவனது மயக்கம் மொத்தமும் சுத்தமா தெளிந்து எல்லா நினைவு நரம்புகளிலும் புதுரத்தம் பாய்ந்து சென்றது. அவன் கான்ஸ்டபிள பார்த்து உரக்கக் கூவினான், சா.......ர்...அதோ போறான் பாருங்க சார், அவந்தான் சார் பெயின்டிங் மேஸ்திரி, அவன்தான் சார் மெயின் இன்பர்மேஷன் சென்டர்,....!!! அவன்தான் சார் மெயின் ப்ராசஸிங் யூனிட்......!!! அவன்தான் சார் மெயின் செர்வர்......!!!....

நடந்தது என்னன்னா, 
கூலி கணக்கு பார்க்க வீட்டுக்கு வந்த பெயின்டிங் மேஸ்திரி போலீஸ் வண்டிய பார்த்ததும் அவசர அவசரமா எஸ்கேப் ஆக முயற்சிக்கும்போது துரதிஷ்டவசமா, இல்லை இல்லைஅருணோட அதிஷ்டவசமா, இல்லை இல்லை அதிஷ்டவசமா தொப்பை இன்னும் வளராததால் கான்ஸ்டபிள் துரத்திப்போய் பிடிச்சதும் ஈசியா மாட்டிக்கிட்டான்.

புதுசா வீட்டுக்கு அடிச்ச பெயின்ட் வாசனை கொஞ்ச நாளுக்குத்தான் அருணுக்கு தொல்லை கொடுத்தது. ஆனா ராத்திரியும் பகலும் வீட்டை சுத்தி அந்த கான்ஸ்டபிளோட டால்பி டிஜிட்டல் சத்தம் மட்டும் ரொம்ப காலத்துக்கு அவனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த மாதிரி நேரத்தில் அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான், “என்னை சும்மா பயமுறுத்தத்தான் கான்ஸ்டபிள் அப்பிடியெல்லாம் சவுண்டு குடுத்தாரு. இல்லைன்னா நோட்டு புத்தகத்தில எழுதிவச்ச கணக்கு ஞாபகம் வச்சுக்காததுக்கு யாராச்சும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி போயி அடிப்பாங்களா என்ன.....?” ஐயோ. தமாசு தமாசு.

ஆனா பூனைக்கு எல்லாம் தமாசும் விளையாட்டும்தான். எலிக்குதானே தெரியும் வலியும் அவஸ்தையும் எல்லாம். 

திங்கள், ஜூன் 16, 2014

மாயக்கண்ணன்தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவனது மகன் மண்ணை அள்ளி தின்றுக் கொண்டிருந்ததைப்  பார்த்தேன். ஓடிச் சென்று அவன் கையைப் பிடித்து "உன் பெயர் என்னடா?" எனக் கேட்க, மழலைச் சிரிப்புடன் "கண்ணன்" என்று சொன்னான். "மண்ணையா தின்கிறாய், உன் வாயைத்  திறந்து காட்டு" என்ற போது  மீண்டும் அதே மழலைச் சிரிப்புடன் வாயைத் திறந்தான். மாயக் கண்ணனின் வாய்க்குள் ஈரேழு பதினான்கு உலகங்களும் சுற்றி சுழல்வதை கண்டு ரசிக்கும் சக்தியில்லாத பாவப் பிறவியாகிப் போனேனே நான் என மனம்வருந்தி வந்த வழி திரும்பி நடந்தேன்.

சனி, ஜூன் 14, 2014

மியாவ்வ்வ்வ்வ்.......


அந்த பூனைக்கு போலீஸ் வேலை.

இந்த சின்ன எலி தன் மூக்கை தரையில் தட்டி தட்டி தரையை மோப்பம் பிடித்தபடி பதுங்கி பதுங்கி வாலை அங்கும் இங்கும் ஆட்டியபடி ஒரு புகார் அளிக்க அந்த போலிஸ் பூனையிடம் வந்தது.. ஈவ் டீஸிங் கேஸ். எலியை கண்ட பூனையின் கண்ணிரண்டும் பிரகாசித்தது. புசு புசுவென அதன் ரோமங்கள் எழும்பி நின்றது. முன் மற்றும் பின் கால்களின் நகங்களை உள்ளே இழுத்து கொண்டு தனது இருக்கையின் நுனிக்கு வந்து அமர்ந்தது. எலி இன்னும் கொஞ்சம் அருகே வந்தது. ரொம்ப கிட்டத்தில் வந்து பூனையை பார்த்தவுடன் அதற்கு பயத்தில் பதற தொடங்கியது. பூனையின் மீசை ரோமங்கள் அதன் மூச்சின் வெகத்துக்கு எற்ப அசைவதை கண்டு மிரண்டது. பூனையின் ஓரப் பார்வையை கண்ட எலி தனது மாராப்பை சரிசெய்து கொண்டது. பூனை லத்திக்கம்பை எடுத்து மேஜையின் மீது மெதுவாக தாளம் தட்ட தொடங்கியது. எலி உடம்பெல்லாம் உதறல் எடுக்க திரும்பி போய் விடலாமா என ஒரு கணம் யோசித்தது. பூனையின் அனல் பார்வையை கண்டு திரும்பி போகவும் பயமாக இருந்தது. அக்குளில் வைத்திருந்த புகார் மனுவை எடுத்து பூனையிடம் பவ்யமாக நீட்டியது.  

பூனை : ம்..........என்னாடி இது..........?  
எலி   : ஒரு பராதிங்க.....எஜமான்.
பூனை முன்னங்கால தூக்கி ஒரெ மிதி.
ஐயொ........ 
(மிதி)
வலிக்குது
(மிதி)
தாங்க முடியல
(மிதி)
எதுக்கு என்ன அடிக்கிறீங்க...
(மிதி, மிதி)
நான் போயிடுறேன் எஜமான்
(மிதி)
வலிக்குது எஜமான்
(மிதி)
நான் புகார் கொடுக்க வந்தவ எஜமான்.......
(மிதி, மிதி)
நான்.......
(மிதி)
எனக்கு ஒண்ணும் வேணாம் நான் போயிடுறென்
(மிதி)
அம்மா......
(மிதி)
கொல்றானே.....
(மிதி)
...........
(மிதி)
............

என்ன சத்தத்தையே காணோம்...செத்துட்டாளா.......சே....இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடலாம்னு பார்த்தேன்.......