புதன், நவம்பர் 26, 2014

எப்போது ஒளிவரும்....?

இருட்டு
கும்மிருட்டு
எதையும்
பார்க்கமுடியாமல்
எந்தவொரு
தைரியசாலியையும்
பயமுறுத்தும் 
அப்படியொரு
இருட்டு
திடுக்கிட்டு
கண்விழித்து
பார்க்கிறேன்.
ம்ஹும் .......
பிரயோஜனமில்லை
அப்பவும் கூட
இருட்டுதான்

 
 

சனி, நவம்பர் 22, 2014

பாட்டு கேட்டு பாராட்டு


அனைத்து விதமான ரசிகர்களும் விரும்பும் சிறந்த திரைப்பட காதல் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த காதல் பாடல்கள் நம் மனதுக்கு பிடிக்க முக்கிய காரணம் அதன் டியூன் எப்போதும்
மென்மையாகவும் மெலடி மெட்டுக்களாகவும் அமைந்திருக்கும். இசைக் கருவிகள் அடக்கமாக இசைப்பதும், பாடகரும் பாடகியும் மெல்லிய
சுருதியில் பாடுவதும், ஹம்மிங் மற்றும் கோரஸ் போடும் ஜிகினா
குரல்கள் அமைதியாகவும் ஒலிக்கும் இந்த வகையான பாடல்கள் நம் மனதுக்கு உடனே பிடித்து போகின்றது. அனைவரும் விரும்பும் காதல் பாடல்களுக்கே உரிய ஒரு தனி ஃபார்முலா இது.

ஆனா இங்க பாருங்க இந்த காவியக் காதல் பாடல் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே ஆரவாரம். இசைக் கருவிகளின் ஆனந்தத் தாண்டவம். மென்மையான இசையென்றால் உடனே நம் ஞாபகத்துக்கு வரும் புல்லாங்குழல் கூட இங்கே உச்ச ஸ்தாயியில் பின்னி பெடலெடுக்கின்றது. பாடகர்களைப் பற்றியோ சொல்லவே  வேண்டாம். குறிப்பாக TMS. "டட டாடா...டடடட டாடா...." என நீட்டிப் பாடுவதைக் கேட்கும்போது அவருக்கு இரண்டு மூன்று தொண்டைகள் இருந்திருக்குமோ...? என்று தோன்றுகிறது.

இளமைத் துள்ளலுடன் காதல் ரசம் சொட்டும் பாடல் வரிகளும் அசத்தல். குறிப்பாக "அச்சம் இதோடு அடங்கட்டுமென்று அணைத்தேன் மெதுவாக" என்ற வரிகளை கேட்டு அந்தக் கால இளசுகள் அடக்கமுடியாமல் தள்ளாடி தவித்திருப்பர்கள் என்பது நிச்சயம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இல்லையா....?வியாழன், நவம்பர் 20, 2014

வதந்"தீ"

ஒன்றுகூடி நின்றவர்களிடையே வதந்தி பரவியது.
வதந்தி பரவிதும் வாக்குவாதம் தொடங்கியது
வாக்குவாதம் முற்றி க(ழ)லகம் தொடங்கியது.
க(ழ)லகம் தொடங்கியதும் பிரிவினை தோன்றியது.
பிரிவினை தோன்றியதும் அணிகள் தோன்றியது
அணிகள் தோன்றியதும் கோஷங்கள் தோன்றியது
கோஷங்கள் தோன்றியதும் கூட்டணி தோன்றியது
கூட்டணி தோன்றியதும் அடிதடிகள் ஆனது
அடிதடிகள் ஆனதும் காயம் பட்டுகொண்டனர்.
காயம்பட்டுக் கொண்டவர் நிர்கதியாய் நின்றனர்.
நிற்கதியாய் நின்றவர்கள் வஞ்சிக்கப் பட்டனர்.
வஞ்சிக்கப் பட்டவர்கள் நீதிவேண்டி சென்றனர்.
நீதிவேண்டி சென்றவர்கள் ஒன்றுகூடி நின்றனர்.
 

செவ்வாய், நவம்பர் 18, 2014

அண்ணேன்டா........

 
சினேதகாரே....
ஓரமா போய் நில்லு...
அண்ணன் வராரு பாரு...
 
போட்டோ உதவி: கூகிள் 

சனி, நவம்பர் 15, 2014

காது காது லேது லேது

எனக்கு என் மனைவியின் மீது ரொம்ப பாசம். அவளுக்கு உடம்புக்கு சுகமில்லைன்னா எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். இதுவரை கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டு  இருந்தது. ஆனால் இப்ப கொஞ்ச நாளா சின்ன சின்ன குழப்பங்கள். நான் ஒண்ணு  கேட்டால் அவள் ஒன்று சொல்கிறாள். அவள் கேள்விக்கு நான் பதில் சொன்னால் ரொம்பத்தான் கோபித்து கொள்கிறாள். குழம்பிப் போனாலும் நான் பொறுமையாய் இருந்து கடைசியில் அதற்கான காரணம் கண்டுபிடித்தேன். அவளுக்கு காதில் எதோ குழப்பம். கேட்கும் சக்தி குறைந்து விட்டது என தெரிந்தது. அனால் அவளிடம் சொன்னால் வருத்தப் படுவாள். என்ன செய்வது என யோசித்து நான் மட்டும் எனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்டேன்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு யோசனை சொன்னார். கேட்கும் சக்திக் குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கலாம்.  மனைவிக்கு எவ்வளவு தூர இடைவெளியில் காது கேட்க முடிகிறது
என்பதை அறிந்து கொள்ள ஒரு டெஸ்ட் செய்ய எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

இன்றே அதை செய்ய முடிவு செய்து வீட்டுக்கு திரும்பி வந்தேன். அவள் சமயலறையில் இருந்தாள். நான் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்திற்கு சென்று அங்கிருந்து குரல் கொடுத்தேன், "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (தோராயமா ஒரு 30 அடி தொலைவு)

எதிர்பார்த்த மாதிரியே எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் அங்கிருந்து திரும்ப வீட்டு  பின்கதவுக்கு அருகில் வந்து நின்று மீண்டும் குரல் கொடுத்தேன்.
"என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா  ஒரு 20 அடி தொலைவு)

இப்பவும் எதுவும் பதில் வரவில்லை. நான் வீட்டுக்குள் வந்து பெட்ரூமில் இருந்து மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 15 அடி தொலைவு).

எதுவும் பதில் வராததால் எனக்கு மிகுந்த கவலையாயிற்று. ஹாலுக்கு வந்து இருந்து மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 10 அடி தொலைவு).

பதிலில்லை. நான் மனமொடிந்து போனேன். சமையலறைக் கதவருகில் சென்று பார்த்தேன்.அவள் திரும்பி நின்றபடி சமையல் செய்து கொண்டு
இருந்தாள். கதவுக்கு அருகில் நின்றபடி மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 5 அடி தொலைவு).

பட்டென்று திரும்பிப் பார்த்தவள் என்னை முறைத்து பார்த்தாள். நான் டெஸ்ட் ரிசல்ட் வந்ததில் மகிழ்வதா இல்லை கவலைப்படுவதா என குழம்பி நிற்கையில், அவள் சத்தமான குரலில், " இதோட 5 தடவ சொல்லிட்டேன், "மீன் கொழம்பு", மீன் கொழம்பு" உங்களுக்கு காது கேக்குதா இல்லையா ......?