செவ்வாய், மே 20, 2014

கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலைகள் இல்லை.

நிக்கோலஸ் ஜேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமா நிக் வோய்ச்சிச். ஒரு உணர்ச்சிகரமான பேச்சாளர். 
பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.

இவர் தன்னுடைய எட்டாவது வயதில் மனஉளைச்சல் காரணமாக அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார். அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி சுட்டிக்காட்டியது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. அதன்பின் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, நீச்சல் அடிக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.

தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது வயதில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. 2012-ம் ஆண்டு, கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய 21-ம் அகவையில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தபின் மிகப்பிரபலமான பேச்சாளராக உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிமான பள்ளிக் கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயர்ச்சியின் முக்கியத்துவம் பற்றிய உரையாற்றியுள்ளார். இவர் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிட்ஸ் (Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life) 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் தான் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார். 

கீழே நான் இணைத்துள்ள வீடியோவில் கை கால்கள் இல்லாமலே இவர் செய்யம் ஆச்சரியமூட்டும் சாகசங்களை பாருங்கள். இணைய வேகம் கருதி இந்த சிறிய அளவிலான வீடியோவினை இணைத்தேன். youtube ல் இன்னும் நிறைய வீடியோக்கள் உள்ளன. எல்லாம் மிகவும் அருமை.   

1 கருத்து:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது