செவ்வாய், டிசம்பர் 31, 2013

இரண்டாயிரத்து பதிமூன்றும் இரண்டாயிரத்து பதிநான்கும்

சிதைந்து போன சணல் சாக்கு துணியால் மூடிய தனது உளுத்துப்போன உடலில் முதுமை தந்த சுருக்கங்கள் நிறைந்திருக்க, கால விருட்சத்தின் விழுதினை பற்றி பிடித்தபடி தன்னந்தனியாக வந்து அமர்ந்தான் அவன். ஒளிவீசிக்கொண்டிருந்த நிலவை மூடி மறைக்க விரைந்து சென்றுகொண்டிருந்த கருமேகக் கூட்டங்களை தன் இடுங்கிய கண்களால் வெறித்துப் பார்த்தான். எதையோ நினைத்தபடி ஒரு கல்லெடுத்து தன்னருகில் இருந்த கலங்கியிருந்த குளத்தில் எறிந்தான். இளகிய குளத்தில் நிலவின் பிம்பம் துண்டு துண்டாக சிதறியது.

"யாரது"...? என அசரீரியாக வந்த கேள்விக்கு "நான்தான் இரண்டாயிரத்து பதிமூன்று", என பதில் சொல்லும்போதே வாயில் மிச்சமிருந்த கடைசி பல் சிதைந்த ஈறுகளை பிய்த்துக்கொண்டு உதிர்ந்தது. தொண்டையிலிருந்த நாள்பட்ட சளியுடன் சேர்த்து  அதனை குளத்தில் துப்பினான். அகோர பசியுடன் இருந்த மீன்களின் கூட்டம் ஒன்று அதை தின்ன வேகமாக நீந்தி வந்ததை பார்த்து அதிர்ந்தான்.


மனதை கவ்வியிருந்த கவலைகளும், அதை தீர்க்க முடியாமல் போன தனது இயலாமையும் தந்த பயம் அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது. முகத்தில் விழுந்திருந்த நீண்ட சடைமுடி கொத்தான மண்புழுக்களைப் போல் காட்சியளித்தது.


"ச்சே, எவ்வளவு ஆர்பாட்டமா, கொண்டாட்டமா இருந்தது நான் பிறந்து வளர்ந்த நாட்கள், என் பயணங்கள், ஹ்ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்", தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். "இப்ப ஒண்ணுக்கும் லாயக்கில்லாத உதவாக்கரையா ஆகிவிட்டேனே. ஒருத்தனும் மதிக்க மாட்டேங்கிறானே. சின்னப்பயலுக கூட என்ன பாத்தா ஓடிபோறாங்களே", கன்னத்தில் கை வைத்தபடி புலம்பினான்.


ஊதக் காற்று வீச ஆரம்பித்து அவனது வேதனையை இன்னும் அதிகமாக்கியது. இன்றைய பொழுதை கழிக்க எதாவது ஒரு வீட்டில் இடம் கிடைக்குமா என தேடத் தொடங்கினான்.எக்குத்தப்பா ஏதோ ஒரு வீட்டு கதவை தட்டி ஏதாவது இளம் ஜோடிகளின் ஏச்சுக்கு ஆளாகி விட்டாலோ என்ற சிந்தனை அவன் வயிற்றைக்  கலக்கியது.


"ஐயோ அம்மா முடியலையே, ரொம்ப களைப்பா இருக்குதே. இன்னிக்கு இதுக்கு மேல ஒரு அடி கூட நடக்க முடியாது. "இந்த நாள்காட்டியில இருக்குற 365 நாளுல கொஞ்ச நாட்களைக் கொறசுக்க கூடாதா?..அப்பவாச்சும் கொஞ்சம் பேருக்கு கொண்டாட்டத்தோடு மகிழ்ச்சியும் கிடைக்குமே?.."


தனது கோபங்கள், வருத்தங்களை மறைக்கும் முயற்சியாக, அவன் சத்தம் போட்டு சிரித்தான்,கர்ஜித்தான்.இரவின்அமைதியை கிழித்துச் சென்ற அந்த அலறலில் சாலையின் இருமங்கிலும் இருந்த வீட்டு சுவர்களும்,மேல் கூரைகளும் அதிர்ந்தன. வீட்டிலிருந்த குழந்தைகள் பயந்து தங்கள் தாய் தந்தையரிடம் ஓடி தஞ்சமடைந்தனர்.குலுங்கிய மரத்தின் கிளையில் தொற்றிக்கொண்டிருந்த கடைசி இலையும்உதிர்ந்து விழுந்தது.  எல்லாவரும் கைவிட்டபோதும் அவன் தனது கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையை கொஞ்சமும் விடவில்லை. 


சாலை முடிவில் இருந்த வீட்டில் "இரண்டாயிரத்து பதினான்கை" வரவேற்க வைத்திருந்த வரவேற்பு வளையம் பொன்னிற ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. "நீ இன்னும் கனவுலகிலேயே இருக்கிறாய். இரண்டாயிரத்து பதினான்கு எங்களது எல்லா ஆசைகளையும் லட்சியங்களையும் நிஜமாக்க வருகிறது, அவனுக்கு வழியை விட்டு நீ கிளம்பு தம்பி, காத்து வரட்டும்". காலையில் தன்னைப்பார்த்து ஒரு இளைஞன் சொன்ன ஒரு சிறந்த நகைச்சுவையை நினைத்து மீண்டும் சிரித்தான்.  


"அட முட்டாள் பயல்களா, எது உங்க ஆசைகளையும் , லட்சியங்களையும் எல்லாம் வல்ல இரண்டாயிரத்து பதினான்கு நிறைவேற்றிடுமா? இப்படி சொல்லி சொல்லித்தானே என் உடம்ப ரணகளப் படுத்தினீங்க? இன்னுமா?.... காய்ச்சு சொரி பிடிச்சு என் உள்ளங்கை ரேகையெல்லாம் அழிஞ்சு இப்ப எனக்கே என்னோட எதிர்காலம் என்னன்னு கணிக்க முடியல. நான் வரும்போதும் நல்லதத்தானடா  சொன்னேன். அதை யாரும் கேட்காம என்னோட இந்த தள்ளாத வயசில உங்களுடைய எல்லா தவறுகளுக்கும் என்னையே குற்றம் சொல்லுறீங்களே? இது நியாயமா?....


பதிலேதும் வரவில்லை. மரணம் இன்னும் சில மணித்துணிகளுக்கு முன்னே தென்பட எல்லாவற்றையும் பெரும் வேதனையுடன் பொறுத்துக் கொண்டு அவன் மெல்ல நடந்து இரண்டாயிரத்து பதினான்கின் வீட்டை அடைந்தான். கால்கள் தளர தளர இருதயம் எப்போதையும் விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது. உடலில் மிச்சமிருந்த எல்லா சக்தியையும் ஒன்றிணைத்து அவன் இரண்டாயிரத்து பதினான்கின் வீட்டுக்கதவை தட்ட தன் கையை உயர்த்தினான். ஆனால் அடுத்த வினாடி வானில் இருந்து விழும் மழைத்துளி மண்ணைத் தொடும் முன் பனிக்கட்டியாய் ஆனது போல உறைந்து தரையில் விழுந்தான். 


வீட்டின் உள்ளே யாரோ பாடுவது  கேட்டது. மனம்  மயக்கிய அந்த பாடலை தெளிவாக கேட்க விரும்பி அவன்  தனது தசைநார்களை முறுக்கியபடி மெல்ல நகர்ந்தான். "அடடே இது என்னோட விருப்பமான பாட்டல்லவா?, காதலில் மூழ்கி மதிமறந்து நான் இளமை ராகத்தில் பாடிய பாட்டல்லவா? என் காதலின் பெருமையையும் அதை கைகூடாமல் செய்த நயவஞ்சகர்களைப் பற்றியும் சொல்லும் பாட்டல்லவா?  

அந்த ஆனந்தப் பாடலை தெளிவாகக் கேட்க விரும்பி நத்தை போல் ஊர்ந்து சென்று வீட்டு சுவற்றில் தனது காது பதித்து அமர்ந்தான். இப்போது பாடல் தெளிவாக கேட்டது, கண்ணை மூடியபடி அந்த பாடலை ரசித்தான். கேட்க, கேட்க அவனுக்கு தனது வாழ்கையின் இனிமையான தருணங்கள் ஒவ்வொன்றாக  நினைவுக்கு வர கண்ணிலிருந்து தரைதாரையாக கண்ணீர் பெருகி வழிந்தது, வானத்து மேகங்களும், நட்சத்திரங்களும் பார்த்துகொண்டிருக்கும்போதே அவன் மெல்ல மெல்ல கரைந்து மறையத் தொடங்கினான். வீசிய  குளிர்க்காற்றில் அவனது கண்ணீர் துளிகள் உறைந்து இரண்டாயிரத்து பதினான்கின் வீட்டு ஜன்னல் மற்றும் வீட்டு முற்றத்தில் இருந்த பூந்தோட்டத்தில் வெண்பனியாக வீழ்ந்து கொண்டிருந்தது.   

2 கருத்துகள்:

  1. உங்கள் சொல்வீச்சு அழகாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.
    வருடம் ஏன் பெண்ணாக இருப்பதில்லை?

    பதிலளிநீக்கு
  2. சொல்வீச்சு உங்கள் பதிவுகளை மீண்டும் மீண்டும் படித்துப் பெற்ற அனுபவம். வருடம் ஏன் பெண்ணாக இருப்பதில்லை? என்ற உங்களது கேள்விக்கான பதிலை கண்டிப்பாக 2014ம் "வருடம்" முடிவதற்குள் சொல்ல முயற்சிக்கிறேன்,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது