புதன், மார்ச் 25, 2015

கிரிகெட் புதிர்

கிரிகெட் எப்பவுமே ஒரு கணிக்கவே முடியாத ஒரு விளையாட்டு. எப்ப என்ன நடக்கும் எந்த அணி ஜெயிக்கும் எந்த அணி தோற்கும் என்பதை சொல்லவே முடியாது. நல்லா ஆடுறவன் திடீர்னு அவுட் ஆவறதும்,  டம்மியா ஆடுறவன் கடைசி பந்தில் சிக்சர் அடிச்சு  மேட்ச்ச ஜெயிச்சு குடுக்கறதும், உறுதியா ஜெயிச்சிரும்னு தோன்றும் ஒரு ஒரு அணி கடைசி ஓவர்ல தோத்து போறதும் சர்வ சாதாரணமா நடக்கும். இப்படி இன்னும் பல விதமான கிரிகெட் ஆட்டங்களையும், முடிவுகளையும் நீங்க பாத்திருப்பீங்க.

தற்போது நடைபெறும் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகின்றது. 2011 ஆண்டு நடந்த போட்டியைப் போலவே  இந்த முறையும் வெற்றிபெற்று  கிரிகெட் உலக கோப்பையை 
தக்க வைத்து கொள்ளும் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல.
இந்திய கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் அதைத்தானே விரும்புவர்.



தற்போதைய இந்த கிரிகெட் பரபரப்பில் உங்களுக்கு ஒரு கிரிகெட் புதிர். 
 
இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்குற ஒரு கற்பனை 
ஆட்டம். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  அற்புதமாக  விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய
இந்திய அணி தொடக்கத்தில் சற்று பதறியபடி ஆடி சொற்ப
ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் 
விராட் கொஹ்லியும் சுரேஷ் ரெய்னாவும் தங்களது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றியின் 
விளிம்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். 
 
இப்ப ஸ்கோர் போர்ட பாருங்க

இந்தியா 49.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள்.  விராட் கொஹ்லி (நாட் அவுட் - 198 ரன்கள்)  சுரேஷ் ரெய்னா (நாட் அவுட் - 97 ரன்கள்)

இந்திய அணி வெற்றிபெற  இன்னும் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே தேவை. வெற்றி எளிதாகிவிட்ட இந்த நேரத்தில் விராட் கொஹ்லிக்கு திடீரென  ஒரு யோசனை தோன்றியது. ரெய்னாவிடம் அதை சொன்னதும் அவன் மகிழ்ச்சியுடன் அதை ஒத்துக் கொண்டான்.
 
அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிறார் விராத் கொஹ்லி.
5 வது பந்தும் 6 வது பந்தும் வீசி முடித்தபின் ஆட்ட முடிவு இப்படி வருகிறது

இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 
விராட் கொஹ்லி இரட்டை சதம். சுரேஷ்  ரெய்னாவும் சதம் அடித்தார்.

வெற்றி பெற இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இது  எப்படி சாத்தியமாயிற்று. விடை தெரிந்தால் சொல்லுங்களேன் 


 

சனி, பிப்ரவரி 14, 2015

பிரியமானவளே


என் அன்பே உன்னுடன் சேர்ந்து செல்ல நானும் இருந்தேனே...
பொறுமையுடன் காத்திருந்து என்னைக் கைப்பிடித்தபோது
நீயடைந்த அளவில்லா மகிழ்ச்சியை உன் முகத்தில் கண்டேனே...
உன் பயணத்தில் என்னை கையிறுக்கிபிடித்தபடி இருந்தாயே..
உன்னுடன் நானிருக்கும் கர்வம் உன் விழிகளில் கண்டேனே ...
என்மீது நீ காட்டிய பிரியமெல்லாம் ஒரு கணத்தில் 
தவிடுபொடியாய் விடுமென ஒருபோதும் நினைக்கலையே
உன்னுடைய சுயரூபத்தை என்னிடமே காட்டிவிட்டாயே..

உன் பயணம் முடிந்ததும் அந்த கோட்டு போட்டவன் கேட்டான்னு 
என்னை முழுசா கொடுத்திட்டு நீ பாட்டுக்கு போயிட்டீயே.. 
இது நியாயமா..?. 

அதுசரி... இதுக்குமேல ஒரு ரயில் டிக்கெட் 
உங்கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்......? 

புதன், நவம்பர் 26, 2014

எப்போது ஒளிவரும்....?

இருட்டு
கும்மிருட்டு
எதையும்
பார்க்கமுடியாமல்
எந்தவொரு
தைரியசாலியையும்
பயமுறுத்தும் 
அப்படியொரு
இருட்டு
திடுக்கிட்டு
கண்விழித்து
பார்க்கிறேன்.
ம்ஹும் .......
பிரயோஜனமில்லை
அப்பவும் கூட
இருட்டுதான்

 
 

சனி, நவம்பர் 22, 2014

பாட்டு கேட்டு பாராட்டு


அனைத்து விதமான ரசிகர்களும் விரும்பும் சிறந்த திரைப்பட காதல் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த காதல் பாடல்கள் நம் மனதுக்கு பிடிக்க முக்கிய காரணம் அதன் டியூன் எப்போதும்
மென்மையாகவும் மெலடி மெட்டுக்களாகவும் அமைந்திருக்கும். இசைக் கருவிகள் அடக்கமாக இசைப்பதும், பாடகரும் பாடகியும் மெல்லிய
சுருதியில் பாடுவதும், ஹம்மிங் மற்றும் கோரஸ் போடும் ஜிகினா
குரல்கள் அமைதியாகவும் ஒலிக்கும் இந்த வகையான பாடல்கள் நம் மனதுக்கு உடனே பிடித்து போகின்றது. அனைவரும் விரும்பும் காதல் பாடல்களுக்கே உரிய ஒரு தனி ஃபார்முலா இது.

ஆனா இங்க பாருங்க இந்த காவியக் காதல் பாடல் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே ஆரவாரம். இசைக் கருவிகளின் ஆனந்தத் தாண்டவம். மென்மையான இசையென்றால் உடனே நம் ஞாபகத்துக்கு வரும் புல்லாங்குழல் கூட இங்கே உச்ச ஸ்தாயியில் பின்னி பெடலெடுக்கின்றது. பாடகர்களைப் பற்றியோ சொல்லவே  வேண்டாம். குறிப்பாக TMS. "டட டாடா...டடடட டாடா...." என நீட்டிப் பாடுவதைக் கேட்கும்போது அவருக்கு இரண்டு மூன்று தொண்டைகள் இருந்திருக்குமோ...? என்று தோன்றுகிறது.

இளமைத் துள்ளலுடன் காதல் ரசம் சொட்டும் பாடல் வரிகளும் அசத்தல். குறிப்பாக "அச்சம் இதோடு அடங்கட்டுமென்று அணைத்தேன் மெதுவாக" என்ற வரிகளை கேட்டு அந்தக் கால இளசுகள் அடக்கமுடியாமல் தள்ளாடி தவித்திருப்பர்கள் என்பது நிச்சயம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இல்லையா....?



வியாழன், நவம்பர் 20, 2014

வதந்"தீ"

ஒன்றுகூடி நின்றவர்களிடையே வதந்தி பரவியது.
வதந்தி பரவிதும் வாக்குவாதம் தொடங்கியது
வாக்குவாதம் முற்றி க(ழ)லகம் தொடங்கியது.
க(ழ)லகம் தொடங்கியதும் பிரிவினை தோன்றியது.
பிரிவினை தோன்றியதும் அணிகள் தோன்றியது
அணிகள் தோன்றியதும் கோஷங்கள் தோன்றியது
கோஷங்கள் தோன்றியதும் கூட்டணி தோன்றியது
கூட்டணி தோன்றியதும் அடிதடிகள் ஆனது
அடிதடிகள் ஆனதும் காயம் பட்டுகொண்டனர்.
காயம்பட்டுக் கொண்டவர் நிர்கதியாய் நின்றனர்.
நிற்கதியாய் நின்றவர்கள் வஞ்சிக்கப் பட்டனர்.
வஞ்சிக்கப் பட்டவர்கள் நீதிவேண்டி சென்றனர்.
நீதிவேண்டி சென்றவர்கள் ஒன்றுகூடி நின்றனர்.
 

செவ்வாய், நவம்பர் 18, 2014

அண்ணேன்டா........

 
சினேதகாரே....
ஓரமா போய் நில்லு...
அண்ணன் வராரு பாரு...
 
போட்டோ உதவி: கூகிள்