சனி, நவம்பர் 23, 2013

எல்பிடபிள்யூ


ஒரு நல்ல கிரிகெட் மேட்ச் நண்பர்களுடன் சேர்ந்து டிவியில் பார்த்து கொண்டு இருந்தேன். திடீரென அம்பயர் ஒரு தவறான எல்பிடபிள்யூ கொடுத்து பிறகு மைதானத்தில் உள்ள பெரியதிரையில் ரீப்ளே பார்த்துவிட்டு சின்ன இளிப்புடன் தலையை குனிந்து கொண்டான்.

போச்சு போச்சு அவுட். சரியான மாங்கா  மடையனை அம்பயரா போட்டு இருக்கான்டா. அவுட்டே இல்லே. ரீப்ளே பாரேன் பால் நல்லா பேட்டுல பட்டு திரும்புது . இத போயி எல்பிடபிள்யூ குடுத்துட்டான். கூட மேட்ச் பார்த்து கொண்டிருந்த கூட்டாளி புலம்ப ஆரம்பித்தான். நானும் பார்த்தேன். அவுட் இல்லைதான். ஆனாலும் பேட்ஸ்மென் சின்ன வருத்ததுடன் அம்பயரை எதுவும் கேட்காமல், சொல்லாமல் பெவிலியனுக்கு நடையை கட்டினான். பாவம் அவன் என்ன பண்ணுவான். எதாவது சொல்லி தனது எதிர்கால கிரிகெட் வாழ்வுக்கு வினையாகி  விட்டாலோ என்று நினைத்திருப்பானோ என்னவோ.



மனசு மெல்ல 25 வருட பழைய நினைவுகளுக்கு சென்றது. கிரிகெட் விளையாடுவது சாப்பாடுபோல ஆகியிருந்த வயசு. அனால் விளையாடுவது எங்க தெருவில் மட்டும்தான். விளையாட தெரிஞ்சவன்னு எவனும் கிடையாது. 2 டீமுக்ன்னு ஆள் கிடச்சா போதும். ஆட தொடங்கிருவோம்.  ஆள் எப்படியாச்சும் கெடச்சிரும் என்பதால் தினமும் ஆடுவோம். அப்புறம் பக்கத்துக்கு தெரு டீம் கூட அருகில் இருந்த கிரவுண்டுக்கு சென்று ஆட ஆரம்பித்தோம். ஞாயிற்றுக்கிழமை  மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் கிரவுண்டுக்கு. மற்ற நாட்கள் மீண்டும் தெருவில்.

ஒரு நாள்  டீம்ல சின்ன டிஸ்கஷன். 'எவ்வளவு நாள்தான் பக்கத்துக்கு தெரு பசங்கக் கூடவே ஆடுறது' ஒரு தரம் கூட்ஸ் ஷெட் கிரவுண்டுல டோர்னமென்ட் மேட்ச் ஆடலாண்டா, எங்க எங்க டீம் ஆல் ரவுண்டர் ராஜேந்திரன் முன்மொழிஞ்சதை உடனடியா நான் வழி மொழிஞ்சேன். சத்யா அப்போ டீம் காப்டன், பேட் வச்சிருக்குறவன், மெயின் பைனான்சியர் எல்லாம். "போடா அதெல்லாம் வாணா. காசு  கட்டணும். கூதல் அடிப்பானுங்க (ஏமாற்றுதல்). திருப்பி எதாச்சும் கேட்டா சண்டைக்கி வருவானுங்க. அந்த ஏரியாவுல ஒரு அவசரத்துக்கு ஓடி எஸ்கேப் ஆக கூட முடியாது" என்றான்..

நாங்க எதோ சண்டைக்கு கூப்பிட்டது போல அவன் பேசினது எங்களுக்கு பிடிக்கல. "ஏண்டா  எடுத்ததும் இப்பிடி பேசுற. ஒரு தடவ ப்ராக்டீஸ் மாதிரி ஆடி பாத்துருவோம். அதுக்கப்புறம் வேற இடத்துல டோர்னமென்ட் வெச்சா போக தைரியம் வரும்ல.  நம்ம டீம் மாதிரிதான் அவுங்களும். எவனுக்கும் ஆட தெரியாது", டோர்னமென்ட் ஆடும் ஆசையில் நான் அள்ளி விட்டேன். கூட  இருந்தவங்களும் ஒத்து ஊத அரை மனதுடன் சம்மதித்தான் சத்யா.



எல்லாம் நல்லபடியா முடிஞ்சு இதோ இன்னிக்கு எங்களுக்கு முதல் டோர்னமென்ட் மேட்ச். டோர்னமென்ட் நடத்துறவன் எங்களுக்கு ஆட்ட விதிகளை விளக்க ஆரம்பித்தான். "தொ பார்மா, 20 ஓவர் மாட்ச், ஒரே ஆளு 4 ஓவர்க்கு மேல போட  கூடாது. நோ பால், வைடுக்கு மட்டும் ரன்னு கீது. லெக் பைஸ் கடியாது. எல்பிடபிள்யூ இருக்கு தெர்தா?' எங்களுக்கு எல்லாம் ஓகே மாதிரிதான் பட்டது. கடைசியில் சொன்ன எல்பிடபிள்யூவை தவிர "இன்னாம்மா எல்பிடபிள்யூ இருந்தா லேக்பைஸ் குடுக்கனும்லே", கொஞ்சமா விவரம் தெரிஞ்ச சத்யா கேட்டான். '"அதெல்லாம் கடியாது, ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்', டாஸ்  போடலாமா? உடனடியா பதில் வந்தது. எங்களுக்கு லைட்டா எதோ புரிய ஆரம்பித்தது. எதோ எல்லாம் இல்ல, கூதல் அடிக்க ஆரம்பிசிட்டாங்க என்பதுதான் சரி.

வெந்த புண்ணுல வேல பாச்சுற மாதிரி, பழனி என்கிட்ட  கேட்டான், 'மதே, எல்பிடபிள்யூன்னா இன்னாடா?,. ?..?....?  "ஸ்டம்ப மர்சிக்கினு நிக்கும்போது பால் கால்ல பட்டா அவுட், அதான் எல்பிடபிள்யூ" நான் சொன்னது கண்டிப்பா அவனுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. டாஸ் போட்டு மேட்ச் ஆரம்பித்தது விட்டது.

"டேய்  இன்னிக்கு மேட்ச் மட்டும் ஜெயிச்சா போதுண்டா. செமிக்கு போயிடலாம். பாத்து விளையாடு",  என்கூட ஒபெனிங் பேட்ஸ்மேனா வந்த கன்னியப்பன் ரகசியமா சொல்லி விட்டு ஆட தொடங்கினான். அவன் கொஞ்சம் உஷார் பார்ட்டி. ஸ்டம்ப நல்லா காட்டிகொண்டே ஆடினான். வரிசையா 2 வைட் 1 நோபால் எல்லாம் சேர்த்து கொண்டே பந்து வீசிய கொண்டிருந்த பவுலர், காலில் பட்டதற்காக 2 முறை எல்பிடபிள்யூ அப்பீலும் கேட்டான். ஆனா அதெல்லாம் வைட் போக வேண்டிய பால்தான். எதிர  நின்னு பார்த்து கொண்டிருந்த நான் அம்பயர் நல்லா அம்பயரிங் பன்னுராறேன்னு நினைத்தேன்.  ஒரு வழியா ஓவரின் கடைசி பந்தை வீ சினான் எதிர் டீம் பவுலர். பந்து மீண்டும் ஒரு முறை கன்னியப்பன் பேடில் பட்டு விழுந்தது. ச்சே.... அதுவும் வைட் போக வேண்டியது வேஸ்ட் பண்ணிட்டான்.



"அ ...............வூ................ட்டே" ...............   பவுலர் கூவினான். அம்பயர் மெதுவாக கைய  தூக்கி அவுட் குடுத்தான்.  எனக்கு சர்ருன்னு கோவம் வந்து "ஏய், எதுக்குடா அவுட்டு. அது வைட் போக வேண்டிய பால்"...ன்னு அம்பயர மூஞ்சிக்கு  நேரா பாத்து கேட்டேன். 

"ஏய் சவுண்ட்லாம் வுடாத.....மவன ஏரியா  தாண்ட மாட்ட.....மூணு தடவ கால்ல பட்டிச்சில்ல .... அவுட்டும்மா.... போயிக்கினே இரு". 






1 கருத்து:

  1. கிரிக்கட் விளையாடிய நாட்களை நினைவுபடுத்தி விட்டீர்கள் மது. இதே போல் பல அனுபவங்கள் எனக்கும் உண்டு.. சுவைப் பட சொல்லுதல் உங்களுக்கு கைவரப் பெறுகிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது