வெள்ளி, அக்டோபர் 31, 2014

புது மாப்பு

 
இன்று எனது முதலிரவு. 
ரொம்ப களைப்புடன் கட்டிலில் காத்திருக்கிறேன். இரண்டு நாட்களாக 
கடுமையான அலைச்சல்.  இப்போதுதான் எல்லா வேலைகளும் முடிந்து 
உட்கார சிறிது நேரம் கிடைத்துள்ளது. தூக்கம் கண்வாசலில் தொத்திக் 
கொண்டு நிற்கிறது. மணப்பெண்ணை இன்னும் காணோம். நேரம் பன்னிரண்டு மணியை கடந்துவிட்டது.முதலிரவு என்ற நினைப்பு 
இவளுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா..? தூக்க கலக்கத்தை போக்க இரண்டு தடவை டீ குடித்து விட்டேன் 
இரண்டாவது முறை டீ கேட்டபோதே அம்மா பிளாஸ்க் கழுவுரதைப் 
பார்த்தேன். இனிமேல் டீ  கேட்டால் அதில்தான் தருவாங்க. மறுபடியும் அவுங்கள தொல்லை பண்ணகூடாது.
பால்சொம்பு ஏந்தி வரும் கொலுசு சத்தத்துக்காக மனம் ஏங்கித் தவித்தது.
"அடடே நீங்க இன்னும் தூங்கலையா..?"
என்று கெட்டபடியே அவள் அறைக்குள் நுழைந்தாள். "எங்கடீப்போயித் தொலைஞ்சே"ன்னு கேட்கத்  தோன்றியதை அப்படியே அடக்கிக் குரலை மிமிக்ரி பண்ணி மாற்றி 
"ஏம்மா இவ்வளவு லேட்டு"
என்று கனிவாக கேட்டேன்.
 "உங்க உறவுக்காரங்க எல்லாரையும் விசாரிச்சிட்டு இருந்தேன்". "கட்டின புருஷன இங்க தனியா உக்கார வச்சிட்டு உனக்கென்ன அவுங்ககிட்ட 
விசாரிப்பு வேண்டிக்கிடக்கு..?",
(இல்லீங்கோ, நான் அப்பிடி கேக்கலீங்கோ) திரும்பவும் பல்லக் கடிச்சிகிட்டு "பால் கொண்டுவரலயா...?"   
என்று என்னுடைய குரலிலேயே  பாலையும் தேனையும் சேர்த்துக்கொண்டு கேட்டேன்.
 "பாலா.?, தூங்குறதுக்கு முன்னாடி நீங்க பால் குடிப்பீங்களா.?" என்றாள். "அப்படியெல்லாம் இல்லை, முதல் இரவுன்னாலே பால் கொண்டு வரும் சீன்தான்  சினிமாவில பார்க்கிறோம், அதான் கேட்டேன்". உடனே அவள் "நான் போயி பால் இருக்கான்னு கேட்டுப்  பாக்கட்டுமா?." "மரியாதையா போயி பால் கொண்டுவாடீ" என்று சொல்ல விரும்பினாலும் மீண்டும் பல்லை கடித்துக் கொண்டு
 "பரவாயில்லை, வேண்டாம்".
அதை கேட்டதும் கேட்காததுமாய் சென்றுவிட்டாள்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நாம என்னிக்கு பால் சாப்பிட்டு 
இருக்கோம். பண்ணுறது சேல்ஸ் மேன்  வேலை. ஓயாம பிரயாணம் பண்ணி பண்ணி சாப்பிடவே நேரம் இருக்காது. அப்புறம் எங்க பால்.? சிந்தனைக்கு 
திரைசீலை விழ பால் எடுத்துக் கொண்டு அவள் வந்துவிட்டாள்.
அவள் கிளாஸ பிடித்திருக்கும் விதத்திலேயே அவளுக்கு சுடுதண்ணி 
கூட வைக்கத் தெரியாது என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.
"இந்தாங்க பால்".
பால் டம்ளரை வாங்கி அவளை ஒரு குறும்பு பார்வை பார்த்தேன்.

அவளோ அறையின் மூலையில்அலங்கோலமாக கிடந்த சூட்கேஸை
பார்த்தபடி நின்றிருந்தாள். அது அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்தது. அவள் கவனத்தை என்பக்கம் திருப்ப எண்ணி கேட்டேன். 
"ஏன் சூட்கேஸ ஒழுங்கா அடுக்கி வைக்கலை.?"
 "அடடே மறந்துட்டேங்க',
பதில் சொன்னபடியே சூட்கேஸை  நோக்கி நடந்தாள். 
"சரி சரி காலையில பாத்துக்கலாம்" ......
ஏற்கனவே ரொம்ப நேரமாயிடுச்சு. இனி இவள் துணிமணிகளை சூட்கேஸில் அடுக்க இன்னும் எவ்வளவு நேரமாகுமோ என்ற கவலைதான்.

 "நீங்க காலையில சீக்கிரமா எந்திரிப்பீங்களா?". 
கொஞ்சம் தர்மசங்கடமான கேள்வி கேட்டாள். நாம என்னிக்கி சீக்கிரம் எந்திரிச்சிருக்கோம். ஆனா இப்ப அந்த ரகசியத்தை அவளுக்கு சொல்ல வேண்டாம். போகப் போக அவளுக்கே புரிந்து விடும்.
 "நானா ..? எந்திரிப்பேன்..... ஆனா நாளைக்கு வேண்டாம். ரொம்ப களைப்பா  இருக்கு நல்லா தூங்கணும்"
"அம்மா அப்பா சீக்கிரமா எந்திரிப்பாங்களா..?" 
"ஆங்.. அவுங்க தினமும் சீக்கிரமா எந்திரிச்சுடுவாங்க, என்ன விஷயம்..?"
இல்ல...யாரும் எந்திரிக்கலன்னா நானும் சீக்கிரம் எந்திரிக்க வேணாமில்ல. அதான் கேட்டேன்".

மனதில் சட்டென ஒரு மின்னல் வெட்டியது. இவ பயங்கரமான ஆள்தான். 
எல்லா விஷயத்திலும் சரிக்கு சமமா இருக்க இருக்கணும்னு பார்க்கிறாள். கொஞ்சம் விட்டா என் வீட்டில் இனி மதுரை ராஜ்ஜியம் தொடங்கப் 
போவது உறுதி. முதலிரவிலேயே விட்டுக் கொடுக்க எனக்கு 
விருப்பமில்லை. கொஞ்சம் கண்டிப்பு காட்ட நினைத்தேன்.

 "இதோபார், நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தெரிஞ்சுக்கோ", என்று கொஞ்சம் அதட்டலுடன் சொன்னேன். அதைக் கேட்டு அவள் சத்தமாக சிரித்தபடி,
"போங்க, சும்மா தமாஷ் பண்ணாதீங்க, உங்கள பாத்தா அப்படியெல்லாம் தெரியல"
ஊசி பட்டாசு வெடிச்ச மாதிரி உங்களுக்கு ஏதாவது சத்தம் கேட்டுச்சா...? ஒண்ணுமில்ல எங்கிட்ட இருந்த ஒரே ஆயுதமும் நமத்து போன கவலையில் என் மனசு வெடிச்ச சத்தம்தான் அது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,
 "என் முகத்தப் பார்த்து எடை போடாத, நான் ஒரு பாம்ப அடிச்சு கொன்னிருக்கேன்,தெரியுமா?", 
முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் சொன்னேன். உடனே அவள்
 "இதென்ன பெரிய விஷயமா.? எங்க அப்பத்தா கூடத்தான், கைத்தடிய வச்சு அடிச்சு ஒரு பெரிய பாம்பை கொன்னிருக்காங்க, தெரியுமா.?"

இவ என்ன தலைய தூக்க விடமாட்டான்னு தோன்றியதால், நான் வம்பு வளர்க்க விரும்பாமல் சொன்னேன்,
"சரி சரி படுக்கலாம்".
"ஆமாங்க நானே சொல்லணும்னு  நெனச்சேன், ரொம்ப களைப்பா இருக்கு நல்லா தூங்கணும்'.
"என்னது தூங்கணுமா"
என்னடா இது, இவ்வளவு நேரம் காத்திருந்தது வீணாயிடுமா..? வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ என தோன்றியது. அதற்குள் அவள் போர்வையை மூடி படுத்து விட்டிருந்தாள். 
"என்னங்க, தூங்கும்போது என்னை தொடாதீங்க,சின்னவயசு பழக்கம், 
தூங்கும்போது யாராச்சும் தொட்டா நான் என்னையறியாம எத்தி 
விட்டுடுவேன். ஒருதடவ இந்தமாதிரி எங்க பெரியம்மாவை  எத்தி விட்டு 
அவுங்க கால் ஒடஞ்சு போச்சு".

ஒரு நிமிஷம் என் இதய துடிப்பு நின்றது போலிருந்தது.
சந்தேகத்துடன் கையை வைத்துப் பார்த்தேன். இல்லை அது வேகமாக 
துடிக்க தொடங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.
பக்கத்தில் படுத்திருக்கும் அவள் மீது  கை பட்டுவிட்டாலோ..? கிரிகெட் விளையாடும்போது உபயோகிக்கும் சேஃப்டிபேட் ஏதாவது 
போடணுமா?. எதுக்கு வம்பு என்று நான் போயி ஓரத்தில் இருந்த 
சோஃபாவில் நிம்மதியாக படுத்து தூங்கினேன். 

விடிந்தது. எனது களைப்பு நன்றாக குறைந்திருந்தது. நேற்றிரவு அவள் போர்த்தியிருந்த போர்வை என் மீது போர்த்தியிருந்தது. அட, இது எப்போ நடந்தது என்று எழுந்து பார்த்தேன். கட்டில் மீது இருந்த 
படுக்கை விரிப்புகள் ஒழுங்காக மடித்து வைக்கப் பட்டிருந்தது.பரவாயில்லையே, எனக்கு வாய்த்த மனைவி சுறுசுறுப்பும் சுத்தமும் கொண்டவளாக 
இருக்கிறாளே, நேற்று கலைந்து கிடந்த சூட்கேஸையும் காணோம். நான் எழுந்திரிக்கும் முன் அதையும் சீராக அடுக்கி எங்கோ எடுத்து வைத்துள்ளாள். பக்கத்துக்கு டேபிள் மீது டீ ரெடியா இருந்தது. கிட்ட போயி பார்த்தேன். கிளாஸ் காலியாய் இருந்தது. ஆனா அது என்ன டீ கிளாஸ் கீழ ஒரு பேப்பர் 
மடிச்சு வச்சிருக்கு, குழம்பிய  சிந்தனையோடு அதை எடுத்து படித்தேன். 

"என்னை மன்னியுங்கள். என் காதலனுடன் நான் போகிறேன். அவன் நேற்றிரவு செல்போனில் பேசினான். நாங்கள் ஆறு ருஷமா 
காதலிக்கிறோம். புரியிது. கல்யாணத்துக்கு முன்னமே ஏன்  சொல்லலன்னு நீங்க  நினைக்கலாம்.என்ன செய்வது?. 
அவனுக்கு வேலை எதுவும் இல்லை.காசுக்காகத்தான் இந்த கல்யாணம். 
அப்பா வரதட்சினையா கொடுத்த நகைகளும்,கல்யாணத்துக்கு நீங்க எனக்கு 
கொடுத்த பனிரெண்டு பவன் நகைகளும் எடுத்துக்கொண்டு நான் போகிறேன்.
நீங்க வருத்தப்படாதீங்க. நீங்கள் மிகவும் நல்லவர். நான் காதலிக்காமல் இருந்திருந்தால் உங்களை கல்யாணம் செய்தது 
எனக்கு ரொம்ப பெருமையாக இருந்திருக்கும்.எதுக்கும் இன்னும் ஒரு ஆறு மாசத்துக்குல் நீங்க வேற கல்யாணம் எதுவும் பண்ணாதீங்க. ஒருவேளை அவன் என்னை சரியா வச்சுக்கலன்னா நான் உங்களிடமே திரும்பி  வந்துவிடுவேன். நீங்க என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்று  நம்புகிறேன். அன்புடன் உங்கள் ......"

கடிதம் படித்து முடித்ததும்,
 "அம்மா....."
என உரக்க கத்தினேன். ஓடிவந்த அவரிடம் கடிதத்தை படிக்க கொடுத்து புலம்பினேன்.
"இப்ப எல்லாருக்கும் சந்தோஷமா.?, நாயா பேயா ஓடி அலைஞ்சு சம்பாதிச்ச 
பணம். என்னெல்லாம்  சொன்னீங்க..பன்னிரெண்டு  பவுன் நகை போட்டது ரொம்ப கொறச்சலா இருக்கு, இப்ப பாத்தீங்களா ஆறு மாசமில்ல ஆறு 
வருஷத்துக்கு இனி கல்யாணம் பண்ண முடியாது. இந்த கல்யாண 
செலவுக்கு வாங்கின கடன அடைக்கவே எவ்வளவு வருஷம் ஆகுமோ தெரியல". (சத்தம் அதிகமாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ரூமுக்குள் நுழைந்தனர்) எல்லாவரையும்  பார்த்து எனக்கு மீண்டும் கோபம் பொங்கியது.
"எல்லாருக்கும் சந்தோசமா, காஸ்ட்லி இன்விடேஷன் கார்ட் வேணும், ஸ்பெசல் சாப்பாடு வேணும், மண்டபம் பெருசா வேணும், வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும், கல்யாணம் ரொம்ப கிராண்டா பண்ணனும்னு, இப்ப எல்லாருக்கும் சந்தோஷமா..?"

என்னுடைய புலம்பல் நீண்டு அங்கு உள்ளவர்களை  வாய்பேச முடியாமல் 
செய்தது.ஒரு சின்ன அமைதிக்கு பின் திடீரென எல்லாவரும் சத்தமாக சிரிக்கத்  தொடங்கினர். எதுவும் புரியாமல் முழிபிதுங்கி நின்றதும் அவர்களை விலக்கி தள்ளியபடி ஒரு தேவதை கையில் டீ கிளாஸுடன் உள்ளே வந்தாள். அவளேதான், தன் காதலனுடன் ஓடிப்போவதாக சொன்னவளேதான்.

"நீ எங்களையெல்லாம் எத்தனை தடவை ஏமாற்றி விளையாட்டு காட்டியிருப்ப, உனக்கு மட்டும்தான் ஏமாத்த தெரியுமா, உன்னை எப்படி தவிக்க விட்டோம் பாத்தியா.?ஆனா எங்க அண்ணிக்கு இதுக்கு நாங்க 
நன்றி சொல்லணும். சூப்பரா ஆக்ட் பண்ணினாங்க",
என்றெல்லாம் சொல்லியபடி என் மூன்று தங்கைகளும் என் மனைவியின் 
தோளைக்கட்டிக்கொண்டு நின்றனர். உண்மைதான், அவர்களை  விளையாட்டு காட்டி ஏமாற்றுவது என் பழக்கம். 

எனக்கு கவலையும், கோபமும், சந்தோஷமும் எல்லாம் ஒன்றாக மாறி மாறி வந்தது.
"உங்களுடைய முதலிரவு சந்தோஷத்த  பாழாக்கினதுக்கு எங்க எல்லாரையும் மன்னிச்சுடு",
வீட்டில் இருந்த அனைவரும் ஒண்ணா  சொன்னதை கேட்டதும் தான் எனக்கு இது 
எல்லாரும் சேர்ந்து நடத்தின நாடகம் என்பது புரிந்தது.
"சரி சரி எல்லாரும் கிளம்புங்க, பொண்ணும்  மாபிள்ளையும் ஏதாவது ரகசியம் பேச வேண்டியிருக்கும்" 
பாட்டி குறும்பா ஆர்டர் போட்டதும் எல்லாரும் 
ரூமை விட்டு வெளியேறினர். அவள் கதவை அடைத்தாள்.

இப்போது அந்த அறையில் நானும் அவளும் மட்டும், நேற்று நான் பார்க்க விரும்பிய அச்சம்,மடம், நாணம் அத்தனையும் 
இப்போது அவள் முகத்தில். மெதுவாக என்னருகில் வந்து சொன்னாள்
 "டீ". 

கிளாஸை  ஏந்திய கையை விலக்கியபடி  அவள் காதில் மெல்ல சொன்னேன்,
''ஐயோ, ...இன்னும் பல் தேய்க்கல"

இருவரும் ஒன்றாக உரக்க சிரித்தோம்.

 
 

 
6 கருத்துகள்:

 1. ஓடிப்போன இடத்திலேயே முற்றும் போட்டிருக்கலாமோ! :))))

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீராம் சொன்ன மாதிரி முடித்திருந்தால் வித்தியாசமான ட்விஸ்டாகஇருந்திருக்கும். இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மாது! கதை கலக்கல் . வித்தியாசமான நடையில் எழுதியுள்ளீர்கள் . நகைச்சுவை அருமை நினைத்தது ஒன்று சொல்வது ஒன்றாக அமைத்திருக்கும் முறை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. முதல்ல உங்க அனுபவமோனு தோணுச்சு...ஹஹஹ ஹப்பா கதை! செம ட்விஸ்டுப்பா....! செம நகைச் சுவை உணர்வு உங்களுக்கு! நல்ல நடை! சூப்பர்!

  பதிலளிநீக்கு
 6. அனைவரும் சொன்னார்ப்போல
  சுவாரஸ்யத்துடன் செம டுவிஸ்ட்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது