ஞாயிறு, மே 15, 2016

ஒரு நொடி சுகம்

அவிக்கப் போட்ட முட்டைகள் ஆரம்ப கணத்தில்  
இளம்சூட்டை உணர்ந்தபோது ஒரு  நொடி அடிவயிற்றில்
அரவணைக்கும் தன் தாயின் அன்பென்றுதான் நினைத்தன.

தாளிக்கும் கடாயில் விழுந்தபோது முளைவிட்ட பாசிப்பயறு
நட்டுவைத்த பந்தல் கொடியை அணைத்தபடி வளர்ந்திடும்
நாட்களை ஒரு  நொடி கற்பனை செய்து ரசித்துக் கொண்டது

பொங்கிவரும் ஆற்றில் குளித்து விளையாட எம்பிக் குதித்து  
நீந்திச்சென்ற ஆண்பாதிகள் அனைத்தும் ஒரு  நொடியில்
ஒரு இரப்பர் அணைக்கட்டில் தலைமுட்டி மரித்தன.

பிசுபிசுத்த ஈரமெதுவும் கையில் படாமல் சாப்பிடத்தான் கடவுள்
வாழைப்பழத்திற்கு முன்று ஜிப் வைத்த தோலை கொடுத்தானோ
என யோசித்தபடியே நடக்கையில் ஒரு  நொடி வேறொருவன்
சாப்பிட்டு எறிந்த பழத்தோலை மிதித்துவிட்டேன் நான்.....!!!

பின்குறிப்பு : முற்றிலும் கற்பனையானது. தேர்தல் அறிக்கைக்களையோ, இலவச வாக்குறுதிகளையோ அல்லது வாக்காளப் பெருமக்களையோ குறிப்பது அல்ல...!!! 

சனி, மே 14, 2016

தயவுசெய்து அரசியல் பேசாதீர்

முடி திருத்தும் கடைகளில் இப்போது இந்த வாசகங்கள் தென்படுவதில்லை
முன்பிருந்த அழுக்கு நாற்காலிகள் மாறி இப்போது குளுகுளு அறைகளில் 
சொகுசு நாற்காலிகளில் உட்கார்ந்து கழுத்தில் துணியை மாட்டிகொண்டு
சிகை அலங்காரம் செய்பவர்கள் யாரும் இப்போது அரசியல் பேசுவதில்லை

வீட்டுக்கு மளிகைபொருட்கள் வாங்க வருபவர்கள் உட்கார கடைமுன்னாடி
போட்டு வைத்திருக்கும் மேஜைகளை இப்போது காணமுடிவதில்லை
சொல்லப்போனா மளிகைக் கடைகளே தென்படுவதில்லை. 
கண்ணாடி கதவினுள் தள்ளுவண்டியோ பிளாஸ்டிக் கூடையோ 
வைத்துக்கொண்டு தனக்கு வேண்டியதை மட்டும் தேடி எடுத்துப் போடுபவர்கள் 
ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்த்துக் கொள்வது கூட கிடையாது

தெருவோர டீ கடைகளிலும் இப்போது இந்த வாசகம் தென்படுவதில்லை
அடுக்கி வைத்திருந்த போண்டா, மசால் வடை, தேங்காய் பன் அனைத்தும் 
உலகமயமாக்கல் எனும் புயலில் சிக்கி சின்னமின்னமாகி போக நாடெங்கிலும் 
முளைத்த புதிய ஆடம்பர கடைகளில் முழு வளர்ச்சியில்லா பிண்டங்களை 
இறைச்சி துண்டுகளாக நறுக்கி அறியாத பெயர்கள் சொல்லி நாவூறும் 
மணமணக்க  பரிமாறும்போதும் பக்கத்துக்கு மேஜையில் சாப்பிடுபவனை
ஓரக்கண்ணில் பார்பவர்கள் யாரும் இப்போது அரசியல் பேசுவதில்லை

கல்லூரிகள், நூலகங்கள், முச்சந்திகள், நெடுஞ்சாலைகள், பேருந்து நிறுத்தங்கள் 
என எல்லா இடங்களிலும் இன்றைய அரசியல் என்பது கட்டிய வேட்டி 
அவிழ்வது கூட தெரியாமல் போதையில் தடுமாறும் ஒரு அவமானம்தான் 
மொத்தத்தில் ஒரு கேலிப் பொருளாகிப் போன விஷயம் மட்டுமே.

ஆனால் திரைமறைவில் ஒரு கூட்டம் சதிவலைகள் பின்னிக்கொண்டு இருக்கின்றது.
ஆயுதங்களை கூர் படுத்திக் கொண்டிருகிறதுபுதிய புதிய வியூகங்களுடன் ஜாதி மத வேடமணிந்து கொண்டு கையில் கருணைஇல்லாத பண மூட்டைகளுடன்
சரியான தருணத்தை எதிர்நோக்கியபடியே களத்தில்  காத்திருக்கின்றது

மக்கள் உண்ணும் உணவும், வசிக்கும் வீடும், வாழும் வாழ்கையும் நாட்டின் அரசியலைத்தான் பிரதிபலிக்கின்றது. மக்களின் எதிர்பார்ப்பையும் 
சகிப்புதன்மையையும் போராட்ட குணத்தையும் பிரதிபலிப்பதே உண்மையான அரசியல். எதிர்கால சந்ததியினருக்கு நாம் வழங்க வேண்டிய உயிரும் உடலும் நம் அரசியல்

புதன், மே 11, 2016

வர்ணஜாலம்

சைடு ரோஸ் சுந்தரி 
வயல(ன்)ட் விழுதுகள்
மஞ்சள் பத்திரிக்கை
சிவப்பு விளக்கு
நீலப் படம்
விழுந்தது ஆரஞ்சு
வீழாதது ஊதா
கருப்பு ஆடுகள்
வெள்ளை வேட்டி
பச்சை பொய்கள்  
ர்ஜாம் காட்டும்
சாயங்களை வெளுப்போமா..?

வியாழன், ஜூலை 30, 2015

அஞ்சலி - கலாம் அவர்களுக்கு சலாம்





20 வருடங்களுக்கு முந்தைய எனது பள்ளிக் கல்லூரி 
காலங்களில் மாணவர்களின் மீது நம்பிக்கையும் அக்கறையும் 
கொண்ட தலைவர்கள் யாரும் இருந்ததாக ஞாபகம் இல்லை. 
தங்கள் அரசியல் சுயநலன்களுக்காக மாணவர்களை பயன்படுத்தும் 
தலைவர்களை மட்டுமே கொண்ட நம் நாட்டில் மாணவர்களின் 
கையில் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை அவர்களுக்கு 
எடுத்து சொல்லி கொடுத்து பிரதிபலனாக அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் மட்டுமே பெற்றுக்கொண்டு மாணவர்களின் 
நவீன மகாத்மாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். 

இந்த விஞ்ஞானியான மெய்ஞானியைப் பற்றி நான் அதிகம் 
அறியாமல் போனது வருத்தமாக உள்ளது. உண்மையில் 
வெட்கப்படுகிறேன். அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள 
வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

கடந்த 15 வருடங்களாக இணையத்தை பயன்படுத்துகிறேன். 
ஆனால் இணையத்தின் மூலம் இதுபோல எந்த ஒரு மனிதருக்கும் மக்கள் இந்த அளவு மரியாதையும் அன்பும் செலுத்தியதை 
பார்த்ததில்லை. கடந்த மூன்று நாட்களும் ட்விட்டர், ஃ பேஸ்புக், வாட்ஸ் அப் என இணையம் மட்டுமல்லாது, அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலும் அவரை பற்றிய செய்திகளும் அவருக்கான 
அஞ்சலி கவிதைகளும் நிரம்பி வழிகின்றது. 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

செவ்வாய், ஜூலை 14, 2015

கண்ணீர் அஞ்சலி

 




மனம் வருந்தி எழுத வார்த்தைகள் இல்லை. அதனால் மெல்லிசை மன்னனின் ஆத்மா சாந்தியடைய என் மனதுக்குள் அழுது பிரார்த்தித்து கொள்கிறேன்

வெள்ளி, ஏப்ரல் 03, 2015

அன்புத் தொல்லை.....

"யார் நீங்க.? என்ன வேணும் உங்களுக்கு..?"

"இப்படி குறுக்கே நிக்காதீங்க. கொஞ்சம் வழி விடுங்க.."

"கன்னா பின்னான்னு பெனாத்திக்கிட்டு ஏன் என் பின்னாடியே வரீங்க..? என்னை கொஞ்சம் போக விடுறீங்களா..?"  

"நான்தான் நீங்க யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்ல. திரும்பவும் ஏன் என்ன தொல்லை பண்றீங்க..?"

"இப்படி வழிமறிச்சு நிக்காதீங்க. என்ன போக விடுங்க. தள்ளி நில்லுங்க. இனிமே உங்க சகவாசமே வேண்டாம்".

"இது  பெரிய தொல்லையா போச்சே. உங்ககிட்டதானே சொல்றேன். எனக்கு நீங்க யாருன்னே தெரியாது. உங்களை எனக்கு இப்ப சுத்தமா பிடிக்கலை. தள்ளி நில்லுங்க நான் போறேன்".

"உங்களோட பழகின நாட்களை எல்லாம் நான் வெறுக்கிறேன். திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு  என் பின்னாடி வராதீங்க". 

"இப்படியெல்லாம் பேசி என்னை  தர்மசங்கடத்தில ஆக்காதீங்க. வேண்டாம் அதெல்லாம் சரியாகாது. இனிமேலும் உங்க தொல்லைய என்னால சகிச்சுக்க முடியாது. நீங்க போயிடுங்க".

"வேண்டவே வேண்டாம்....போயிடுங்கன்னு சொல்றேன்ல"

"நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது.. ஆனா....?"

"நீங்க மறுபடியும் கஷ்டப்படுத்த மாட்டீங்கன்னு சொல்றத நான்
நம்பறதா இல்ல. உங்களால அழுது அழுது என் கண்ணீரெல்லாம் வத்தி வறண்டிருச்சு...திரும்பவும் நீங்க கஷ்டப்படுத்தினால் எனக்கு அழக்கூட திராணியில்ல".

"இங்க நிக்காதீங்க.. போயிடுங்க.. நான் உங்க கூட வர முடியாது".

"அதெல்லாம் சரிதான். இருந்தாலும்...."
 
"வேணாம்..நான் வந்தாலும் எல்லாம் பழையமாதிரி நல்லபடியா அமையறது ரொம்ப கஷ்டம்".

"இப்பவும் என்னை நீங்க சரியா புரிஞ்சுக்கல.. எனக்கு மட்டும் கவலை இல்லைன்னு நினைக்கிறீங்களா...?"

"சரி நான் வருகிறேன். என்னை நேசிக்கும் உங்களுக்காக வருகிறேன். எனக்கும் உங்க மேல ரொம்ப பிரியம்".
 
"உங்களை என்றென்றைக்குமாய் பிரிந்து போக நினைத்த என்னை திரும்ப
கூட்டிச் செல்ல நீங்கள் வந்ததில ரொம்ப சந்தோசம்".

"இனிமேல் என்னை கஷ்டப் படுத்தக் கூடாது.."

"இல்லை இனிமேல் சத்தியமா நான் உங்கள விட்டு போகமாட்டேன்".

"தொல்லை பண்ணிக்கொண்டு உங்க கூடவே இருப்பேன்".


 
 

புதன், ஏப்ரல் 01, 2015

முட்டாள்கள் தினம்

அகில உலக  முட்டாள்களே
மதியில்லா மடையர்களே
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வந்ததே இன்று
முட்டாள்கள் தினம்
இது நமக்கே உரிமையான
ஒரு சுப தினம்
ஒற்றுமையாய் நாமெல்லாம்
ஒன்று கூடியே - இதை
கொண்டாடுவோம்
ஆனந்த கூத்தாடுவோம்
கூவிச் சொல்லிடுவோம்
முட்டாள்கள் வாழ்க வாழ்க
பல்லாண்டு வாழ்க
மடையர்கள் வளர்க வளர்க
நோய்நொடியில்லாமல் வளர்க