திங்கள், மார்ச் 31, 2014

முட்டாள்கள் தினம் உருவான கதை

முன்னொரு காலத்தில் மேற்கே ஏழு கடல் ஏழு மலை தாண்டியுள்ள அமாரிகோ என்ற ஒரு ஊரில் (ஊர் பெயர் உதவி-மூன்றாம்சுழி அப்பாதுரை அவர்கள்) கிளின்டன்வர்மன் என்றொரு அரசன் இருந்தான்(எந்த ஊரில் நடப்பதாக இருந்தாலும் தமிழ் கதைகளில் ராஜாவுடைய பெயர் வர்மன் என்றுதான் இருக்கும் அதனால் மேற்கொண்டு தகராறு எதுவும் பண்ணாம கதைய படிங்க). ராஜாவும் ராணி ஹிலாரியம்மாவும் நல்லாட்சி புரிந்துவந்த  நேரத்தில் அந்த ஊருக்கு கிழக்கே பாரதம் என்ற ஊரிலிருந்து ஒருவன் சாப்ட்வேர் 
எஞ்சினீயர் என்ற உருவத்துடன் வந்து சேர்ந்தான்.

அவனது பெயர் லபக்தாஸ். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது Lord. இர்வின், Lord. மவுண்ட் பேட்டன், Lord. வெலிங்க்டன் இவுங்களப் பத்தியெல்லாம் படிச்சிட்டு அவுங்கள மாதிரி பெரிய ஆபீசரா ஆகி தன்னோட பேருக்கு முன்னாடியும் Lord பட்டத்தை சேர்த்திட்டு லபக்தாஸ் என்ற தனது பெயரை Lord லபக்தாஸ் - னு மாத்திக்கணும் என்பதுதான் அவனது ஒரே இலட்சியம்.
 
"டுபாகூர் ஈஸ்ட்" என்ற சாப்ட்வேர் கம்பெனியில் ஆன்சைட் அசைன்மென்ட் வேலைக்காக நம்ம லபக்தாஸ் அமாரிகோவின் வாஷிங்க்டபுரத்துக்கு வந்திருக்கிறான். இவரப்பத்தி சொல்லணும்னா, இவர் நம்ம கோயமுத்தூர்காரர். அதனால  கொஞ்சம் குசும்பு அதிகம் (கொஞ்சமா........ ? அதிகமா..........? சரியாய் சொல்லு என கேட்டால் - ரொம்ப அதிகம் போதுமா). கூட வேலை பார்க்கும் அமரிக்கோ  ஊருக்காரங்க எல்லாரையும் எப்பவும் ஏதாவது சிக்கல்ல மாட்டிவிட்டு அவுங்க படும் அவஸ்தையை நல்லா பாத்து ரசிப்பதுதான் இவரோட முக்கிய பொழுதுபோக்கு.

கூட வேலை செய்யும் மற்ற பணியாட்களின் e-mail பாஸ்வேர்டை திருடி அவர்களுடைய e-mail மூலமாக உயரதிகாரிகளுக்கு மொட்டைக்கடிதாசி (அடேய்.....பாவி அதுக்குப்பேர்  e-mailடா) அனுப்பி அவுங்களோட அப்ரைஸலுக்கு வெட்டு வைப்பது, அடுத்தவனோட ID கார்ட திருடி அதுக்கு பதிலா தன்னோட ID கார்ட வச்சிட்டு, திருடின ID கார்ட தேச்சிட்டு வெளியே வந்து ஊர்சுத்த சென்றுவிடுவது, மீட்டிங் ரூம் கதவில் "இந்த அறைக்கு உள்ளே நடைபெறும் கசமுசா" என கண்டபடி எழுதிவைப்பது. இதெல்லாம் சும்மா சின்ன சின்ன சாம்பிள்தான்.  

ஆபீஸில் வேலை செய்யும் அத்தனை அமாரிகோ பயலுகளுக்கும் லபக்தாஸோட இந்த மாதிரியான சேட்டைகளை தாங்க முடியவில்லை. இவனால் பாதிக்கப்பட்ட எல்லாரும் ஒண்ணா கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது முள்ளை  முள்ளால் எடுப்பது / இத்தனை நாள் அவன் தங்களுக்கு கொடுத்த மருந்தை அவனுக்கே கொடுப்பது /பழிக்குப்பழி என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். சரியான சமயம் பார்த்து 
திட்டத்தை செயல் படுத்தினாங்க. அன்று ஒரு மார்ச் 31 தேதி. அவுங்க எல்லாரும் HR Dept. மெயில் IDயை ஹேக் செய்து நம்ம லபக்தாஸுக்கு அனுப்ப இருந்த சம்பள ரசீதில் நான்கு பூஜியத்தை கூடுதலா சேர்த்து விட்டனர். மறுநாள் காலை ஆபீஸுக்கு வந்த நம்ம லபக்தாஸ் மெயில பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
 
சென்னை டைடல் பார்க் பக்கத்துல 10 ஏக்கர் நிலம் வாங்க  போதுமான பணம் கிடைத்ததை அறிந்த லபக்தாஸ் ஆன்லைன்ல பேங்க் வெப்சைட்ல தனது அக்கவுன்ட்ட கூட பார்க்காமல் அற்பனுக்கு வாழ்வு வந்த மாதிரி ஒரு நொடியில் மொத்தமா மாறிபோயிட்டான். எப்பவும் திட்டிகொண்டிருந்த மேனேஜர் முன்னாடி போயி நின்னு அவரை கன்னா பின்னான்னு திட்டத்  தொடங்கினான். அன்னைக்கு விசிட்டுக்கு வந்த கம்பெனி M.D கிளிண்டன் வர்மன் மகாராஜாவையும் அவன் விட்டுவைக்கவில்லை. எதாவது பண்ணி கம்பெனியை விட்டு எஸ்கேப் ஆகணும் என்பதுதான் அவனோட திட்டம். 
 
கடைசியில் ஒரு வழியாக சண்டைய போட்டு முடிச்சு, விட்டா போதும்னு ஒரே ஓட்டமா வெளியே ஓடி வந்துவிட்டான். ஏர்போர்ட் பக்கத்தில ஒரு கவுண்டரில் தனது பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் பார்த்தவுடன் "அப்பிடியே ஷாஆஆஆஆஆஆக்க்க்க்க்க்க்க்க்க்க்" ஆயிட்டான். பைத்தியம் புடிச்ச குரங்கினை தேளும் கொட்டியதுபோல் ராஜாவ திட்டிய குற்றத்துக்காக கைதும் செய்யப்பட்டான். 
 
ஆனா நம்ம ராஜா ரொம்ப நல்லவர். நடந்ததை எல்லாம் கேட்டவுடன் அவர் பரிதாப நோயில் வீழ்ந்தார். இரண்டு பக்கத்தினரின் நியாமான நிலையினை புரிந்து கொண்ட அவர் சம்பவம் நடந்த அந்த நாளை முட்டாள்கள் தினமாக அறிவித்தார். இனி எல்லா வருடமும் ஏப்ரல் ஒன்றாம் தேதி யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என சட்ட திருத்தத்தை (இபிகோ - இருநூற்றி நாப்பத்தி எட்டுன்னுன்னு ஞாபகம், சரியா தெரியல) கொண்டுவந்து அதை உடனே தண்டோரா போட்டு அறிவிக்க உத்தரவிட்டார். 

எப்படியோ தண்டனையிலிருந்து தப்பித்து ஊர் திரும்பிய நம்ம லபக்தாஸுக்கு மட்டும் இன்னும் பைத்தியம் தெளியவில்லை. அவன் இப்போது யாரையும், ஏப்ரல் ஒன்றாம் தேதியா இருந்தா கூட ஏமாத்துறதில்லை.


5 கருத்துகள்:

  1. தமிழ் மணம் ,தமிழ் 10 இன்ட்லி திரட்டிகளில் உங்கள் பதிவை இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது ஆலோசனைக்கு நன்றி. எனது வலைப்பூச்செடியில் இன்னும் சிறிது பூக்கள் மலரட்டும். அதன்பிறகு திரட்டிகளில் இணைகிறேன்

      நீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது