சனி, மே 21, 2016

கண்ணில் நீர்வர சிரி


எதிர்பாராமல் கிடைத்த அந்த விடுமுறை நாளில் வெகு சுவாரசியமாக மடிக்கணினியை 
தட்டிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மணி ராத்திரி எட்டுமணியை 
கடந்திருந்தது. வீட்டுக்காரம்மா இரவுஉணவு சாப்பிட கூப்பிடவே இல்லையே என்று 
நினைத்தபடி, சரி இன்னும் கொஞ்ச நேரம் முகநூலையும் பார்த்துவிட்டு செல்லலாம் 
என விட்டுவிட்டேன்.

“அலுவலகத்தில் வேலை செய்யவேண்டிய நேரத்தில் முதலாளியை ஏமாற்றி 
எந்நேரமும் சாட்டிங்  சீட்டிங் என  மூழ்கியிருக்கும் சோம்பேறிகளின் கூட்டம்தான் 
முகநூல்"  நண்பனின் புதிய பதிவை படித்துவிட்டு ஒரு லைக்கை போட்டேன். சரிதான் 
முகநூல் மீதான குற்றச்சாட்டை முகநூலிலேயே பதிவு பண்றியா..? என்று எண்ணியபடி 
கமெண்ட் எதாச்சும் எழுதணுமா என்று யோசித்தேன். என்னத்த எழுதறது..? அவன்  சொன்னது 100% வடிகட்டின சுத்தமான உண்மை. அப்போ அதுக்கு எதிரா கமென்ட் எதுவும் 
எழுத முடியாது அப்பிடியே விட்டுட வேண்டியதுதான். சும்மா எதுக்கு கமெண்ட்  எழுதிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணனும். யாராச்சும் ஏதாவது பிரச்சனையான ஒரு பதிவு 
போடணும் அதை பிச்சு பீசாக்கி பின்னி பெடலெடுத்து கடிச்சு கீறி விட்டு, சின்னதா ஒரு  குற்றம் ஏதாவது மாட்டினா கமெண்ட் மேல கமெண்ட்டா போட்டு வார்த்தை போர்களை  நடத்தி அவன ஒரு வழி பண்றதுதான் நமக்கு பிடிச்சது. முகநூல் பக்கம் வருவதே  அதுக்குத்தானே. தினமும் யாரையாவது கலாய்த்து கொண்டே இருக்கணும் இல்லைனா  தூக்கமே வராது. நமக்குன்னு எவனாவது ஒருத்தன் தினமும் மாட்டுவான். இன்னிக்கு  யாராச்சும் மாட்டாமலா போயிடுவான்.?

அட...இதோ ஒருத்தன் மாட்டிட்டானே...!!! சந்தோஷமா அவனோட பதிவை படிக்க 
தொடங்கினேன்

"வாழ்க்கை நமக்கு கண்ணீர் சிந்தும் தருணங்களை யும் சிரித்து மகிழும் நிகழ்சிகளையும் 
மாறி மாறி  தந்து கொண்டே இருக்கும். ஆனா கண்ணீர் சிந்தி அழும் வேளை வரும் வரை 
அவன் சிரிப்பின் மதிப்பை அறிவதே இல்லை" 

நண்பனின்
 பதிவை படித்து எனது விருப்பத்தை தட்டி விட்டேன். மீண்டும்  ஒருமுறை 
படித்து விட்டு "சிரிப்பின் விலை என்ன.? என ஒரு கேள்வியையும் கேட்டு வைத்தேன். 
கொஞ்ச நேரத்திலேயே பதிலும் வந்து விட்டது.

"சிரிப்பின் மதிப்பை அளக்க முடியாது. சிரிப்பு விலைமதிப்பு மிக்கது"

நான் விடவில்லை "அட அப்படியா..? எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க சிரிப்பு  
ஆரோக்கியமானது எப்பவும் மனிதனால் சுலபமா  செய்ய முடிவது" 
எப்பவோ படிச்ச ஒரு செய்தியைஅப்படியே போட்டு விட்டேன். சிரிப்பை விட 
கண்ணீருக்குதான் நண்பா மதிப்பு அதிகம்.. அதிலும் குறிப்பா நம்மள மாதிரி ஆண்களுக்கு..!!!

அவனுக்கு என்னை விட பிடிவாதம் அதிகம்..'என்ன சொல்லுற..? சிரிப்பு விலை குறைந்ததா..? உனக்கு அதோட மதிப்பு தெரியல அதனாலதான் இப்படி சொல்லுற..!!
நானும் பிடிவாதமாய் "நீ சொல்லுறது சரிதான். சிரிப்புக்கு ஒரு மதிப்பு இருக்கு ஆனா அது 
சிரிக்கிறவங்களையும் சூழ்நிலையையும் பொறுத்ததுதான் அதிகமாவும். 
கண்ணீர் அப்படி இல்லை."

இந்தமுறை அவனுக்கு பதிலாக வேறொரு நண்பனிடமிருந்து பதில் வந்தது. 
"அதேபோல கண்ணீரின் மதிப்பும் அழுபவனையும் சூழ்நிலையையும் பொறுத்துதானே 
அமையும்..?" 

அடடா.. எதிர்க்கட்சி யில ஒரு கூட்டணி சேர்ந்திடுச்சேன்னு நான் அடங்கிவிடவில்லை. 
மறுபடியும் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம் என்று நானும் சிரிப்புக்கு தான் என்று 
அவர்களும் விவாதித்து கொண்டே இருந்தோம். சிரிப்புக்கு ஆதரவாக அவர்கள் இருவரும் 
எதிராக நானும் கன்னா பின்னாவென பதில் அனுப்பியபடியே இருந்தோம்

கள்ளம் கபடமில்லாத சின்னசிறு குழந்தையொன்று புன்சிரிக்கும் படத்தை அவர்கள் பதிவாக   போட ஒட்டிய வயிறும் எழும்பும் தோலுமான ஒரு சோமாலியன் குழந்தை அழும் படம் 
ஒன்றை நான் பதிலாக அனுப்பினேன்

பள்ளிப் பருவ தோழியின் வெட்கப் புன்னகை படத்தை அவர்கள் அனுப்ப காசுக்காக காதலித்து 
கழட்டிவிடும் காதலியின் வஞ்சக புன்னகையை பதிலாகினேன். அந்த புன்னகையில் இதயம்
நொறுங்குபவனின் வேதனை நாம் அறியாததா.?

உழைத்து வீடு திரும்பும் கணவனின் களைப்பை நொடியில் மறக்க செய்யும் அன்பு 
மனைவியின் புன்னகையை அவர்கள் அனுப்ப.. மாற்றான் மனை நோக்குபவன் கண்கள் 
எதிர்பார்திருக்கும் வஞ்சக புன்னகையின் படமொன்றை நானும் அனுப்பி வைத்தேன்.

தம்மக்கள் மழலையின் குறும்பினில் மனம் மகிழ்ந்து தந்தை செய்யும் புன்னகைக்கு பதிலாக 
பெற்ற மலரையே கசக்க நினைக்கும் காமகொடூர தந்தையின் விகார  சிரிப்பை அனுப்ப

மக்களை நோக்கி பணிவுடன் கைகூப்பி ஓட்டு கேட்கும் அரசியல்வாதியின் நமட்டு 
சிரிப்புக்கு எதிராக வெற்றிபெற்றபின் சிரிக்கும் ஆணவ சிரிப்பை பரிசாக அனுப்பினேன்.

கடைசியில் உற்ற நண்பர்கள் ஒன்றுகூடும்போது உதிர்க்கும் உற்சாக சிரிப்பை அவர்கள் 
அனுப்ப வெறுமனே ஹீ...ஹீ..ஹீ ..என பதிலனுப்பினேன்.

நான் சிரிப்பது அவர்களுக்கு தெரியப்படுத்தும் நக்கலான அந்த பதில் அவர்களை 
சங்கடப்படுத்தியதோ என்னவோ...அதன்பின் எனக்கு பதில் எதுவும் வரவில்லை..
மீண்டும் நானே எழுதினேன்.." இப்பவாச்சும் ஒத்துக்கங்க..சிரிப்பைவிட கண்ணீர்தான் 
விலை மதிப்பில்லாதது". ஆனால் நண்பர்கள் இருவரும் அதற்குள் வெளியேறி 
விட்டிருந்தனர். நானும் கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன்.

இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை. அந்த நேரத்தில் ஏழையின் சிரிப்பும் 
பணக்காரனின் சிரிப்பும் மல்லுகட்டின. பசித்தவன் சிரிப்பும் தின்று கொழுத்தவன் சிரிப்பும் 
மோதிக்கொண்டே இருந்தன. புன்சிரிப்பின் ஒளித்துவைத்த வஞ்சகமும் கண்ணில் நீர் 
வரவைக்கும் சிரிப்பும் போராடிக்கொண்டே இருந்தன. குழாயடிச் சண்டைபோல யாரும் 
தோற்காத ஆனால் யாரும் ஜெயிக்காத ஒரு போட்டி.

எதற்கெடுத்தாலும் பிடிவாதத்துடன் எதிர்வாதம் செய்வது கெட்ட பழக்கம்னாலும் என்னால 
மாத்திக்க முடியலையே. அது புரிந்ததாலோ என்னவோ நண்பர்களிடமிருந்து வேற பதில் 
எதுவும் வரவில்லை.

அப்பாடி ஒரு வழியா தப்பிச்சோம். பதில் தெரியாம சும்மா வாக்குவாதம் பண்ணிட்டு எதுவும் 
பிரயோஜனம் இல்லை. ஆனா நான் நல்லா பதில் சொல்லி சமாளிச்சுட்டேனே என்ற 
சந்தோஷத்துடன் வெளியேறி கணினியை அணைத்து விட்டு எழுந்தேன். இனிமேல்தான் 
குளிச்சிட்டு எதாச்சும் சாப்பிட்டு விட்டு தூங்கணும். இடுப்புவலியை சமாளித்தபடியே 
மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தேன். யாரையும் காணவில்லை. 
ஐயோ எல்லாரும் தூங்கிட்டாங்களோ..? இல்லையே டிவி சத்தம் கேக்குதே என 
நினைத்தபடி ஹாலுக்குள் நுழைந்தேன். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். 
அம்மா, தங்கை, வீட்டம்மா ..அட அது யாரு..? பக்கத்து வீட்டம்மா, அக்கத்து வீட்டம்மா 
எல்லாரும் ஒன்றாக கூடியிருந்தபடி கண்ணீரும் கம்பலையுமாக மூக்கை சிந்தியபடி
மவுனமாக அழுது கொண்டிருந்தனர். அடக் கடவுளே எனக்கு தெரியாம அப்படி என்ன 
அபசகுனமா இங்கே நடந்திருக்கும் என்ற விஷயம் புரியாமல் நின்ற எனக்கு 
டிவியில் ஓடிகொண்டிருந்த அந்த மெகா சீரியலைக் கண்டபோது புரிந்துவிட்டது.

நான் வாயடைத்து போனேன். தலைக்குனிந்தபடி மீண்டும் என் அறைக்கு சென்றேன் 
அணைத்து வைத்திருந்த கணினியை மீண்டும் திறந்துப் பார்த்தேன். யாரும் 
ஆன்லைனில் இல்லை. நண்பனின் பதிவினை தேடி பிடித்து மீண்டும் எழுத ஆரம்பித்தேன்..

"மன்னிக்கணும் நண்பா..கண்ணீரின் விலை தண்ணீரை விட மதிப்பிழந்த செய்தியை நான்
அறிந்திருக்கவில்லை. நீங்கள் சொன்னதுதான் சரி. சிரிப்புதான் விலைமதிப்பில்லாதது.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது