சனி, மே 14, 2016

தயவுசெய்து அரசியல் பேசாதீர்

முடி திருத்தும் கடைகளில் இப்போது இந்த வாசகங்கள் தென்படுவதில்லை
முன்பிருந்த அழுக்கு நாற்காலிகள் மாறி இப்போது குளுகுளு அறைகளில் 
சொகுசு நாற்காலிகளில் உட்கார்ந்து கழுத்தில் துணியை மாட்டிகொண்டு
சிகை அலங்காரம் செய்பவர்கள் யாரும் இப்போது அரசியல் பேசுவதில்லை

வீட்டுக்கு மளிகைபொருட்கள் வாங்க வருபவர்கள் உட்கார கடைமுன்னாடி
போட்டு வைத்திருக்கும் மேஜைகளை இப்போது காணமுடிவதில்லை
சொல்லப்போனா மளிகைக் கடைகளே தென்படுவதில்லை. 
கண்ணாடி கதவினுள் தள்ளுவண்டியோ பிளாஸ்டிக் கூடையோ 
வைத்துக்கொண்டு தனக்கு வேண்டியதை மட்டும் தேடி எடுத்துப் போடுபவர்கள் 
ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்த்துக் கொள்வது கூட கிடையாது

தெருவோர டீ கடைகளிலும் இப்போது இந்த வாசகம் தென்படுவதில்லை
அடுக்கி வைத்திருந்த போண்டா, மசால் வடை, தேங்காய் பன் அனைத்தும் 
உலகமயமாக்கல் எனும் புயலில் சிக்கி சின்னமின்னமாகி போக நாடெங்கிலும் 
முளைத்த புதிய ஆடம்பர கடைகளில் முழு வளர்ச்சியில்லா பிண்டங்களை 
இறைச்சி துண்டுகளாக நறுக்கி அறியாத பெயர்கள் சொல்லி நாவூறும் 
மணமணக்க  பரிமாறும்போதும் பக்கத்துக்கு மேஜையில் சாப்பிடுபவனை
ஓரக்கண்ணில் பார்பவர்கள் யாரும் இப்போது அரசியல் பேசுவதில்லை

கல்லூரிகள், நூலகங்கள், முச்சந்திகள், நெடுஞ்சாலைகள், பேருந்து நிறுத்தங்கள் 
என எல்லா இடங்களிலும் இன்றைய அரசியல் என்பது கட்டிய வேட்டி 
அவிழ்வது கூட தெரியாமல் போதையில் தடுமாறும் ஒரு அவமானம்தான் 
மொத்தத்தில் ஒரு கேலிப் பொருளாகிப் போன விஷயம் மட்டுமே.

ஆனால் திரைமறைவில் ஒரு கூட்டம் சதிவலைகள் பின்னிக்கொண்டு இருக்கின்றது.
ஆயுதங்களை கூர் படுத்திக் கொண்டிருகிறதுபுதிய புதிய வியூகங்களுடன் ஜாதி மத வேடமணிந்து கொண்டு கையில் கருணைஇல்லாத பண மூட்டைகளுடன்
சரியான தருணத்தை எதிர்நோக்கியபடியே களத்தில்  காத்திருக்கின்றது

மக்கள் உண்ணும் உணவும், வசிக்கும் வீடும், வாழும் வாழ்கையும் நாட்டின் அரசியலைத்தான் பிரதிபலிக்கின்றது. மக்களின் எதிர்பார்ப்பையும் 
சகிப்புதன்மையையும் போராட்ட குணத்தையும் பிரதிபலிப்பதே உண்மையான அரசியல். எதிர்கால சந்ததியினருக்கு நாம் வழங்க வேண்டிய உயிரும் உடலும் நம் அரசியல்

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது